முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
323

New Page 1

வேசத்தைச் சொன்னார் அங்கு; இங்கு அவற்றிற்குக் கூறப்படும் பெயர் இறைவனாகிய தன் அளவில் வந்து முடியும்படியாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்; ஆதலின், அடங்காது என்க.

    எம்மான் - தன் விபூதி விஷயமாகத் தனக்கு உண்டான 1ஓரத்தைக் காட்டி, என்னைத் தனக்கே உரிமை ஆக்கினவன். கண்ணபிரான் - ‘இப்படி இருக்கிறவன்தான் யார்?’ என்னில், கிருஷ்ணன். இனி, கண்ணபிரான் என்பதற்கு, ‘கண்களுக்குத் தோன்றித் திருவருள் செய்கின்றவன்’ என்று கூறலுமாம். என் அமுதம் - 2தேவர்கள் அதிகாரிகளாய் இருக்கிற அமிருதத்தில் வேறுபாடு. சுவையன்-பரமரசிகன்; அவ்வமிருதத்திற்குச் சுவையை நுகருந்தன்மை இல்லையே! திருவின் மணாளன் - 3இவருடைய அமிருதம் ஒரு மிதுனம் ஆயிற்று. இதனால், மேற்கூறிய சுவைக்கு ஊற்றுவாய் அருளிச்செய்கிறார். என்னுடைச்சூழல் உளானே-பெரிய பிராட்டியார் 4‘அகலகில்லேன் இறையும்’ என்னப் பிறந்தவன், என் பக்கத்தில் வாழ்தல் தன் பேறாக வாழ்கின்றான். 5‘எந்த இராமனுடைய திருவருளால் இம்மக்கள் எப்பொழுதும் தெளிந்த மனத்தையுடையவர்களாய் இருக்கின்றார்களோ, அப்படிப்பட்ட இராமன் சுக்கிரீவனுடைய அருளை நல்ல மனத்துடன் விரும்புகிறான்,’ என்றும், 6‘தம்மை ஒழிந்தார்க்கு எல்லாம் நாதனாய் இருக்கும் ஸ்ரீராமர், சுக்கிரீவனை நாதனாக விரும்புகிறார்’ என்றும், கூறப்படுகின்றவாறே, ‘ஆகியும் ஆக்கியும் காக்கும் தனி முதல் எம்மான்’ ஆகிய இறைவன், என்னை விட்டுப் பிரிதற்கு மனம் இன்றி என் அருகிலேயே தங்கி இருக்கிறான் என்பார், ‘என்னுடைச்சூழலுளானே’ என்கிறார்.

(1)

 

1. ஓரம் - பக்ஷபாதம்.

2. ‘என்’ என்ற சொல்லில் நோக்கு.

3. ‘என் அமுதம் திருவின் மணாளன்’ என்று கூட்டி, ‘இவருடைய அமிருதம்
  ஒரு மிதுனம் ஆயிற்று’ என்கிறார். மிதுனம்-இரட்டை. ‘சுவையன் திருவின்
  மணாளன்’ என்று கூட்டி ‘இதனால் மேற்கூறிய சுவைக்கு ஊற்றுவாய்
  அருளிச்செய்கிறார்’ என்கிறார்.

4. திருவாய். 6. 10 : 10. ‘திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளான்’ என்று
  கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார் ‘பெரிய பிராட்டியார்’ என்ற வாக்கியத்தால்.

5. ஸ்ரீ ராமா. கிஷ், 4 : 21.

6. ஸ்ரீ ராமா. துஷ். 4 : 18.