முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
338

New Page 1

சொற்கள். ‘மிக்க ஒளி’ என்றபடி. இனி, ஒளி என்பதற்குப் பேரழகு என்று பொருள் கூறலுமாம். மேற்சொன்ன ஒப்பனையும் மிகை என்று கூறலாம்படியான வடிவையுடையவன் ஆதலின் ‘மூர்த்தி’ என்கிறார். நாள் அணைந்து ஒன்றும் அகலான் - நாள்தோறும் வந்து கிட்டுமத்தனை அல்லது கால்வாங்க மாட்டுகின்றிலன். என்னுடை நாவினுளான் - என்னுடைய துதிக்கு விஷயமானான். இனி இதற்கு ‘வாக்கில் இருந்துகொண்டு வாக்கின் உள் இருக்கிறான்,’ என்கிற படியே, ‘வாக்கு இந்திரியத்துக்கு அந்தர்யாமியாய் உள்ளவன்’ என்று கூறலும் ஒன்று.

(7) 

96

        நாவினுள் நின்று மலரும்
            ஞானக் கலைகளுக்கு எல்லாம்
        ஆவியும் ஆக்கையும் தானே
            அழிப்போடு அளிப்பவன் தானே
        பூவியல் நால்தடந் தோளன்
            பொருபடை ஆழிசங்கு ஏந்தும்
        காவிநன் மேனிக் கமலக்
            கண்ணன்என் கண்ணி னுளானே.


    பொ-ரை :
நாவின் நுனியினின்றும் உண்டாகின்ற ஞானத்தைத் தருகின்ற எல்லாக் கலைகளுக்கும் உயிரும் உடலும் தானே யாவன்; அக்கலைகளை அழிக்கின்றவனும் அவற்றை அழியாமல் காக்கின்றவனும் தானேயாவன்; பூவின் தன்மையினையுடைய நான்கு திருத்தோள்களையுடையவன்; போர் செய்கின்ற ஆயுதங்களாகிய சக்கரத்தையும் சங்கையும் தரித்திருக்கின்ற நீலோற்பலம் போன்ற நிறம் பொருந்திய திருமேனியினையும் தாமரை போன்ற திருக்கண்களையுமுடையவன் ஆன எம்பெருமான் என் கண்ணிலே தங்கியிருக்கிறான்.

    வி-கு : ஈண்டு ‘ஆவி’ என்றது, சொற்களால் அறியப்படும் பொருள்களை; ‘யாக்கை’ என்றது, சொற்களை. நால் - நான்கு.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘எல்லாக் கலைகளாலும் அறியப் படுகின்ற சர்வேஸ்வரன், பிரமாணங்களாலே காணக்கூடிய வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான்,’ என்கிறார்.

 

1. ‘கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே’ என்றதனை
  நோக்கி ‘எல்லாக் கலைகளாலும் அறியப்படுகின்ற சர்வேஸ்வரன்’
  என்கிறார்.