முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
352

நியமங்களோடே சரணம் புக்கார்; ஆதலின், இப்பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க, 1‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ என்று பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீவிபீஷணாழ்வான்; அவன் தான் பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை; ‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில், ‘பெருமாள் இக்ஷவாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்; ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்; ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா, அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா; ஆகையாலே, சர்வாதிகாரம் இவ்வுபாயம்’, என்று அருளிச்செய்தார். பகவானுடைய பிரபாவத்தை அறிந்த நன்ஞானமுடையார்க்கு ‘இதுவே பொருள்’ என்று தோன்றும்: ‘கேவலம் கிரியாமாத்திரத்துக்கே பலத்தைக்கொடுக்கும் ஆற்றலுள்ளது’ என்று இருப்பார்க்கு ‘இப்பொருள் பொருத்தம் அன்று’ என்று தோன்றும்.

    மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய் விரியும் எம்பிரானை-‘காரணமான ஐம்பெரும்பூதங்கட்கும் உள்ளீடாய் 2நான் பலவாக விரிகிறேன்’ என்கிறபடியே, தன் மலர்த்தியே ஆகும்படி இருக்கிற உபகாரகன். காற்று எல்லாவற்றையும் தரிக்கச்செய்வது ஆதலின், ‘நல்வாயு’ என்கிறார். ‘நான் பல பொருள்களாக விரிகின்றேன்,’ என்பது சுருதியாதலின், ‘விரியும்’ என்கிறார். எம்பிரான்-கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில், எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்?’ 3‘தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தன் சங்கல்பத்தைப்பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன், தன் பக்கல் ஆசை சிறிதுடையார் சங்கல்பத்தைப் பற்றித் தான் உளனாம்படி இருப்பானான பின்பு, இவ்வாத்துமாவிற்கு ஒரு குறையுண்டோ?’ என்கிறார்.

(2)

 

1. ஸ்ரீராமா. யுத். 19 : 31.

2. தைத். ஆன. 6. 91.

3. இங்கு ஐம்பெரும்பூதங்களை அருளிச்செய்ததனால், எல்லாப்
  பொருள்களையும் உபலக்ஷணத்தாற்கொண்டு, ‘தன்னை ஒழிந்த எல்லாப்
  பொருள்களும்’ என்று தொடங்கும் வாக்கியத்தை அருளிச்செய்கிறார்.