முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

10

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

கிடப்பது? 1சங்கத்தளவிலே நில்லாது ‘பெறில் பிழைத்தல்; பெறாவிடில் முடிதலான நிலையை அடைந்தாயே! என்பாள், ‘காமுற்றாயே’ என்கிறாள். தாமம் - ஒலியும் மாலையும்.                                  

(2)

113

 

        காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
        நீமுற்றக் கண்துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்
        தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள்நயந்த

        யாமுற்றது உற்றாயோ? வாழி! கனைகடலே! 2

 

    பொ - ரை : ஒலிக்கிற கடலே! நீ விரும்பிய பொருள் கையில் கிடைக்கப்பெறாத காரணத்தால் இரவும் பகலும் முற்றும் தூங்குகிறாய் இல்லை; அதனோடு நில்லாது, மனமும் உருகி ஏங்குகிறாய்; ஆகையால், தென்னிலங்கை முழுதினையும் நெருப்பிற்கு உணவாகக் கொடுத்த ஸ்ரீராமபிரானுடைய திருவடிகளை விரும்பிய யான் பட்ட துன்பத்தினை நீயும் பட்டாயோ? அந்தோ! துன்பு நீங்கி வாழ்ந்திடுக.

 

    வி - கு : ‘காமுற்ற  கையறவோடு ஏங்குதி’ எனக் கூட்டுக. காமுற்ற -வினையாலணையும் பெயர். கையறவு - துன்பம்; ‘யான்பட்ட கையறவு காணாயோ?’ (கம்பரா. சூர்ப்பண. 107) என்ற இடத்துக் கையறவு இப்பொருள்படுதல் காண்க. இனி, ‘காமுற்ற கையறவோடு’ என்பதற்கு, ‘விரும்பிய பொருள் ஒழிதலோடு’ என்று பொருள் கூறலும் ஒன்று. இப்பொருளில் காமுற்ற என்பது பெயரெச்சம். கை - பொருள். ‘அவர் அன்பும் கையற்ற கண்ணே அறும்’ (நாலடி. 37) என்ற இடத்துக் ‘கை’ என்பது இப்பொருட்டாதல் காண்க.

 

    ஈடு : மூன்றாம் பாட்டு. அன்றிலுடைய ஒலிக்கு வருந்தி இருக்கமளவில் கடல் என்று ஒரு 3மஹாதத்வமாய், அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து கரையிலே வருவது கரையேற மாட்டாதே உள்ளே விழுவதாய், எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி ஊமைக் கூறனாகக் கூப்பிடுவதாகிறபடியைக் கண்டு, ‘பாவியேன் இராம குணத்தில் அகப்பட்டு, நான் பட்டது நீயும் பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.

____________________________________________________________

 

1. சங்கம் - அன்பு

 

2. ‘வாயின் இரங்கினை ஆரம் எறிந்தனை வால்வளை சிந்தினைதண்
   பாயலை உந்திணை மாலை அடைந்தனை பாரில்உ றங்கிலையால்!

   கோயி லரங்கனை மாகன கந்திகழ் கோகன கம்பொலியும்

   ஆயிழை நண்பனை நீயும் விரும்பினை யாகும்நெ டுங்கடலே.’

 
  என்னும் திருவரங்கக்கலம்பகச்செய்யும் இத்திருப்பாசுரத்தின் பொருளை விரித்துக் கூறுவது
  போன்று அமைந்துள்ளது.

 

3. மஹாதத்வம் - பெரிய பொருள்.