முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

மக

12

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

மகனையன்றோ நீயும் ஆசைப்பட்டாய?’ என்பாள், ‘தென்னிலங்கை முற்றத் தீ ஊட்டினான் தாள் நயந்த’ என்கிறாள். ‘விபீடணனுடைய மாளிகை தீயால் எரிக்கப்படவில்லையே? ‘இலங்கை முற்றத் தீ ஊட்டினான்’ என்றல் எங்ஙனம் பொருந்தும்?’ எனின், அவன் 1அவர்களுக்குக் கூட்டு இல்லாதவாறு போலே, அவன் அகமும் அவர்கள் அகத்துக்குக் கூட்டு இல்லை காணாய்; அவன் அகம் தாஸோகம் அன்றோ? ஆதலின், விபீஷண கிருஹம் இலங்கைக்குள் அன்று போலே இருந்தது. இனி, கொண்டு கூட்டாது, ‘தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்’ என்று ஆன்றொழுக்காகக் கொண்டு, 6இராவண பயத்தாலே முன்பு அரை வயிறாகப் பிழைத்த நெருப்பு, 2‘ஒள்ளெரி மண்டி உண்ண’ என்கிறபடியே, வயிறு நிறைய உண்டு ஜீவிக்கப்பெற்றது, 3பெருமாளை அண்டை கொண்ட பலத்தாலே,’ என்று பொருள் கூறலுமாம். 4‘செந்தீ உண்டு தேக்கிட்டதே’ என வருதல் காண்க. ஆக, பின் இரண்டு அடிகளால், 5தாள் நயந்தாரோடு தோள் நயந்தாரோடு வாசி அறுவதே கிலேசப்படுகைக்கு என்று கூறி வருந்துகிறாள் என்றபடி. ‘ஆயின், ஆடவனான

_____________________________________________________________

1. ‘பிறப்பு மாற்றினை’ என்ற இராவணன் கூற்றாலும், ‘நல்லது சொல்லினீர் நாமும் வேறினி,
  அல்லது செய்துமேல் அரக்க ராதுமால்’ என்ற விபீஷணன் கூற்றாலும்,’வந்தனை
  நீதியும்பிறவும் மாண்பமைந்து, அந்தணர் இல்லெனப் பொலிந்த தாமரோ’ என்ற திருவடி
  கூற்றாலும் (கம்ப. விபீஷணனடைக்கல. 8, 20, 100.) ‘அவனகம் தாஸோகம்’ என்பதனை
  அறிதல் தகும். தாஸோகம் - அடிமை வீடு.

2. பெரிய திருமொழி. 10. 9: 1.

3. ‘பெருமாள்’ என்றது, சக்கரவர்த்தி திருமகனை.

4. ‘என்று கொல்குரங் கன்னதிவ் வலியுள திலங்கை
  நின்று வெந்துமா நீறெழு கின்றது நெருப்புத்
  தின்று தேக்கிடு கின்றது தேவர்கள் சிரிப்பார்
  நன்று நன்றுபோர் வலிஎன இராவணன் நக்கான்.’

  (கம்பரா. இலங்கை எரி. 46).

  என்ற  செய்யுளை நோக்கி இவ்வாக்கியம் எழுதப்பட்டது போலும்!

5. சேது பந்தன சமயத்தில் தாள் நயந்தது - கடல். மேலும், இயற்கையிலேயே இறைவனுக்கு
  அடிமைப்பட்டிருக்குந் தன்மையும் கடலுக்கு உண்டு. பிராட்டியின்
  நிலையையடைந்திருப்பதனால் தோள் நயந்தவர் - ஆழ்வார்.