முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

132

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

யாலே எல்லாம் சோதி வடிவாயே இருக்குமாதலின், ‘சோதி வடிவு’ என்கிறார். இனி, 1சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு இவரை அனுபவிக்கிறான் ஆதலின், ‘பலபலவே வடிவு’ என்கிறார் எனலுமாம். முத்தன் தன்னையனுபவிக்கும்போது படுமாறு போன்று, தான் என்னை அனுபவிக்கப் பல வடிவு கொள்ளாநின்றான் என்பதனைத் தெரிவித்தபடி.

    பண்பு எண்ணில் - தன்மைகளை நினைக்குமிடத்து. ‘கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து உண்டாகக் கூடியவான ஐம்பொறி இன்பங்களும் பலப்பல’ என்றது, காண்பனவும் உண்பனவும், கேட்பனவும், தொடுவனவும், முகர்வனவுமான இவைகள் பலப்பல என்பதாம். பலபலவே ஞானமும் -ஐம்புலன்களைச் சொல்லுதல்; அவற்றை அறிகைக்குக் கருவியான ஞானங்களைச் சொல்லுதல். ஆயின், 2ஞானம் பல உண்டோ?’ எனின், விஷயங்கள் தோறும் ஞானமும் வேறுபடும் அன்றோ? 3ஆக, இவற்றால், தன்னின் வேறு பட்டவற்றை எல்லாம் விஷயமாக உடையனாய், அவற்றை எல்லாம் அறியவும் வல்லவனாய், அவற்றை எல்லாம் அனுபவித்தால் வரும் ஏற்றத்தையும் உடையவனாய் இருக்கும் இருப்பைத் தெரிவித்தபடி. பாம்பணை மேலாற்கேயோ - இவை எல்லாம் ஒரு விஷயத்தில் இருக்க அனுபவிப்பான் என்னுமிடத்திற்கு உதாஹரணம் காட்டுகிறார். பாம்பு தொடுதற்கு மென்மையாய் இருக்கும்; நறுநாற்றத்ததாய் இருக்கும்; கண்ணுக்கு இனியதாய் இருக்கும். இம்மூன்றும், ஏனை இரண்டற்கும் உபலக்ஷணம்.

    ‘பாம்பணை மேலாற்கு, பண்பு எண்ணில், பலபலவே ஆபரணம்; பேரும் பலபலவே; சோதி வடிவு பலபலவே; கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் பலபலவே; ஞானமும் பலபலவே; ஓ’ என்று கூட்டி முடிக்க.    

(6)

_____________________________________________________________

1. அவதாரிகை - திருமகள் கேள்வன் ஒன்று, பக். 42 காண்க.

2. ‘ஞானம் பல உண்டோ?’ என்றது, ‘தர்மபூத ஞானம் ஒன்றே யன்றோ? பல உண்டோ?’
  என்றபடி. ‘விஷயம் காரணமாக வரும் பேதம் உண்டு’ என்றவாறு.

3. ‘பலபல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம், பலபலவே ஞானமும்’ என்பதற்குக் கூறிய
  பொருள்களை எல்லாம் கூட்டி நிகமிக்கிறார், ‘ஆக, இவற்றால்’ என்று தொடங்கி. ஆக,
  ‘இத்தால், இவரோடே கலந்த பின்பு சப்தாதி விஷய அனுபவத்தால் இன்பமெல்லாம்
  உண்டாயிற்று’ என்றபடி.