முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

161

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 7

133

161

        பாம்பணைமேற் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
        காம்பணைதோள் பின்னைக்காய் ஏறுடன்ஏழ் செற்றதுவும்
        தேம்பணைய சோலை மராமரம்ஏழ் எய்ததுவும்
        பூம்பிணைய தண்துழாய்ப் பொன்முடிஅம் போர்ஏறே.

    பொ - ரை : ‘திருப்பாற்கடலில் பாம்பாகிய படுக்கையின்மேல் அறிதுயில் பொருந்தியதும், மூங்கில் போன்ற தோள்களையுடைய நப்பின்னைப்பிராட்டிக்காக இடபங்கள் ஏழனையும் அழித்ததும், தேன் பொருந்திய கிளைகளையுடைய சோலையாகத் தழைத்த மராமரங்கள் ஏழனையும் ஓர் அம்பால் தொளை செய்ததும், அழகினையுடைய கட்டப்பட்ட குளிர்ந்த திருத்துழாயினை அணிந்த பொன்னாற்செய்யப்பட்ட திருமுடியினையுடைய, அழகிய போரைச் செய்கிற இடபமேயாம்’ என்றவாறு.

    வி - கு : அமரந்ததுவும், செற்றதுவும், எய்ததுவும் என்பன உகரம் கெடாது உடம்படுமெய் பெற்று வந்தன. ‘ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்’, ‘தன்முக மாகத் தான்அழைப் பதுவே’ என்றார் நன்னூலார். ‘காம்பு அணை’ என்பதின் ‘அணை’ உவமை உருபு. ‘ஏறு’ என்பது சொல்லால் அஃறிணையாதலின், ‘அமர்ந்தது’ என அஃறிணை முடிபு கொடுத்து ஓதினார்.

    ஈடு : ஏழாம் பாட்டு. ‘அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும், திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தன எல்லாம் எனக்காக அன்றோ?’ என்கிறார்.

    பாற்கடலுள் பாம்பு அணைமேல் பள்ளி அமர்ந்ததுவும் - துன்பப் படுகின்றவர்களைப் பாதுகாத்தற்காகத் திருப்பாற்கடலிலே தண்ணீரானது உறுத்தாமல் இருக்கும்பொருட்டுக் குளிர்த்தி வாசனை மென்மைகளை உடையவனான திருவனந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளியதும், காம்பு அணை தோள் பின்னைக்காய் ஏறு ஏழ் உடன் செற்றதுவும் - சுற்றுடைமைக்கும் செவ்வைக்கும் மூங்கில் போலே இருந்துள்ள தோள் அழகையுடைய நப்பின்னைப்பிராட்டியின் கலவிக்குத் தடையாய் இருந்த இடபங்கள் ஏழையும் ஒரு காலே 1ஊட்டியாக நெரித்துப் போகட்டதும்.

_____________________________________________________________

1. ஊட்டி - கழுத்து; குரல் வளை.