முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

138

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    வி-கு : கோணை - மிறுக்கு; அதாவது, வருத்தம். ‘எம்பெம்மானைக் கூறுதல் கோணை பெரிதுடைத்து,’ என மாற்றுக. பெம்மான் என்பது பெருமான் என்ற சொல்லின் திரிபு.

    ஈடு : பத்தாம் பாட்டு. ‘என்னோடு கலந்த எம்பெருமான் படி 1பேசப் பெரிதும் மிறுக்குடைத்து,’ என்கிறார்.

    ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் - நாட்டில் காண்கிற ஆண்களின்படியும் அல்லன், பெண்களின்படியும் அல்லன், உபயோகத்திற்குத் தகுதியில்லாத அலியின்படியும் அல்லன். பட்டர் இவ்விடத்தில், 2‘பரமாத்துமாவைப் பற்றிப் பேசும் ஒருவன் தனது வாக்கால் இப்பரம்பொருளைப் பெண் என்றும் சொல்லுகிறான் இல்லை; ஆண் என்றும் சொல்லுகிறான் இல்லை; இவ்விருபாலுக்கும் வேறான அலியாகவும் சொல்லுகிறான் இல்லை. அத்தகைய பரம்பொருள் அகாரவாச்சியனாய் இருக்கின்றான்’; 3‘அப் பரம்பொருள், தேவன் அசுரன் மனிதன் விலங்கு இவைகளாய் இல்லை; பெண்ணாகவும் இல்லை; அலியாகவும் இல்லை; ஆணாகவும் இல்லை; வேறுபட்ட மற்றைப் பொருள்களாகவும் இல்லை; குணமாக இல்லை; கிரியையாக இல்லை; சேதனனுமாக இல்லை; அசேதனனுமாக இல்லை,’ என்னும் இவ்வேத புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி அருளிச்செய்தவாறே, அருகு இருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப்புலவர், ‘சுவாமி, நாட்டில் காணப்படுகின்ற மூன்றின்படியும் அல்லனாகில், சொல்லப்படுகின்ற பொருள் சூன்யமோ பின்னை?’ என்று கேட்க, பட்டர், 4‘பிள்ளை இயல் அறிவுக்குப் போந்திருந்தது இல்லையே! ‘ஆணல்லன் பெண்ணல்லள் அலியும் அல்லது’ என்றார் இலரே? ‘அல்லன், அல்லன், அல்லன்’ என்கிறார். ஆதலின் ‘புருஷோத்தமன்’ என்பதனை அச்சொற்கள் தாமே தோற்றுவிக்கின்றனவே?’ என்று அருளிச்செய்தார். ‘ஆணல்லன்

_____________________________________________________________

1. ’பேருமோர் ஆயிரம் பிற பல உடைய எம்பெருமான், பேறு மோர் உருவமும் உளது
  இல்லை இலது இல்லை பிணக்கே’ என்றார் முன்னும். 1. 3 : 4.

2. ருக்வேதம், ஆர. 2 : 2.

3. பாகவதம், 8. 3 : 24.

4. இயலறிவுக்கு - சொல் இலக்கணத்துக்கு. ‘அர்த்தஞானமே அன்றிச் சப்த ஞானமும்
  இல்லையே!’ என்றபடி.

  ‘ஐயந் திணைபால் அவ்வப் பொதுவினும்
  மெய்தெரி பொருண்மேன் அண்மையும் விளம்புப’

  என்பது நன்னூல்.