முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

பவனும

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 11

141

பவனும், ஜெயசீலனும், வசுதேவருக்குப் புத்திரனும், எங்கும் நிறைந்தவனுமான கண்ணபிரானுடைய நற்குணங்கள் உலகங்கள் அனைத்தும் சேர்ந்து பதினாயிரம் வருஷங்கள் கூறினாலும் கூறி முடிவு பெறா,’ என்பது பாரதம். அம்மானை - குடக்கூத்தாலே என்னைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்டவனை.

    கூறுதலே மேவி - ‘நான் சொல்லுவது என்? சொல்லீரே!’ என்னா, மீண்டும் ‘சொல்லீர் என் அம்மானை’ என்று தொடங்குமவர் ஆதலின், ‘பேச நிலம் அன்று’ என்று வேதங்கள் மீண்ட விஷயம் என்று, தாமும் ‘பேச ஒண்ணாது’ என்று கைவாங்காதே, அழகிதாகப் பேசக்கடவோம் என்று உறுதி கொண்டார். ‘உறுதி கொண்ட அளவேயோ, கூறியதும் உண்டோ?’ என்னில், ‘குருகூர்ச்சடகோபர் அன்றோ? கூறச் சொல்ல வேண்டுமோ? மயர்வற மதிநலமருளப் பெற்றவர்க்குப் பேசத் தட்டு உண்டோ?’ என்றபடி. கூறின் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் கூறுதல் வல்லார் உளரேல் - விஷயத்துக்குத் தகுதியாகப் பேசித் தலைக்கட்டின அந்தாதி ஆயிரத்திலும் இப்பத்தையும் கற்க வல்லவர் உளராகில். கூடுவர் வைகுந்தம் - ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆசைப்பட்டுப் பெறாது ‘ஆடியாடி’யாய் விசனபடாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள். ‘ஆயின், இவரைப் போன்று, ஆற்றாமை இல்லாதவர்களும் பெறுதல் கூடுமோ?’ எனின் தமப்பனது தனம் கிடந்தால் புத்திரன் 1அழித்து ஜீவிக்குமத்தனையன்றோ? 2அது போன்று, இங்கும் ஆழ்வார் பட்ட வியசனம் படவேண்டா; இவருடைய அனுபவத்தைப் பரமபதத்திலே அனுபவிக்கப் பெறுவர்.

    முதற்பாட்டில், இவர் ஆசைப்பட்ட படியே அடியார்கள் குழாங்களோடே வந்து கலந்தபடி சொன்னார்; இரண்டாம் பாட்டில், தம்மோடு கலந்த பின்பு திருமேனியும் திவ்விய அவயவங்களும் திவ்விய ஆயுதங்களும் நிறம் பெற்றன என்றார்; மூன்றாம் பாட்டில், தம்மோடே கலந்து தன் சத்தை பெறுதல். இன்றேல், இல்லையாம்

____________________________________________________________

1. அழித்து - செலவு செய்து.

2. ‘இந்த அரங்கத்து இனிது இரு நீ’ என்றுஅரங்கர்
  எந்தைஎதிராசற்கு ஈந்தவரம் - சிந்தைசெயில்
  நம்மதுஅன்றோ நெஞ்சமே! நற்றாதை சொம்புதல்வர்
  தம்மதுஅன்றோ தாயமுறை தான்?’

(ஆர்த்திப் பிரபந். 60.)

  என்னும் பாசுரத்தை ஒப்பு நோக்குக. சொம் -செல்வம்.