முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

வரனும

ஆறாந்திருவாய்மொழி - பா. 2

151

வரனும் இவரோடே வந்து கலப்பதற்கு முன்பு குறைவுபட்ட ஞானத்தை உடையவனாய் இவரோடே கலந்த பின்பு மலர்ந்த ஞான வெள்ளத்தையும் உடையவன் ஆனான்; திவ்விய மங்கள விக்கிரஹமும் புகர் பெற்றது இப்போது என்றபடி. துளக்கு அறுதலாவது, ‘ஆடி ஆடி’ என்ற திருவாய்மொழியில் உண்டான 1ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்தல் 2‘நடுக்கமற்றவனானான்’ என்றார் ஸ்ரீ வால்மீகி. இனி, துளக்கு அறுதலாவது, ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்கிற உள் நடுக்கமும் தீர்ந்தான் இப்போது என்று கூறலுமாம்.

    அமுதமாய் - 3‘மிக மகிழ்ந்தார்’ என்கிறபடியே, இறைவன் தம்மை விரும்பிப் போக்கியமாக நினைத்திருக்கிற இருப்புத் தமக்குப் போக்கியமாய் இருக்கிறபடி. இறைவன் தம்மை அனுபவித்து இனியனாய் இருக்கும் இருப்பு இவர்தமக்குப் போக்யமாய் இருத்தலின் ‘அமுதமாய்’ என்கிறார் என்றபடி. எங்கும் பக்கம் நோக்கு அறியான் -‘ஆழ்வார் பக்கல் இறைவனுக்கு உண்டான 4அளவு கடந்த காதலைத் தவிர்க்க வேண்டும்’ என்று நாய்ச்சிமார் விரும்பி வார்த்தைகள் கூறினும் அவர்கள் பக்கல் கண் வைக்க மாட்டுகின்றிலன்.

    இங்கே ஆளவந்தாருக்குக் குருகை காவலப்பன் அருளிச் செய்ததாக அருளிச்செய்யும் வார்த்தை: ‘அப்பன் ஸ்ரீ பாதத்திலே ஒரு ரஹஸ்ய விசேஷம் உண்டு’ என்று மணக்கால் நம்பி அருளிச்செய்ய, ‘அது கேட்கவேண்டும்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருள, கங்கை கொண்ட சோழபுரத்து ஏற, 5அப்பனும் அங்கே ஒரு குட்டிச் சுவரிலே யோகத்திலே எழுந்தருளியிருக்க, ‘இவரைச் சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது’ என்று சுவருக்குப் புறம்பே பின்னே நிற்க, அப்பனும் யோகத்திலே எழுந்தருளியிருக்கிறவர் திரும்பிப் பார்த்து,

_____________________________________________________________

1. ஆற்றாமை - ஆழ்வாருடைய ஆற்றாமையாலே.

2, 3. சங்க்ஷேப ராமாயணம். ‘விபீஷணனுக்கு முடி சூட்டிய பின்னர்ச் செய்து முடிக்க
  வேண்டிய காரியங்களைச் செய்து முடித்தவராய் நடுக்கமும் தீர்ந்து மகிழ்ந்தவர் ஆனார்’
  என்பது அச்சுலோகத்தின் பொருள்.

4. ‘அளவு கடந்த காதல் ஆத்துமாவிற்குக் கேடு ஆகையாலே, தவிர்க்க வேண்டும்’
  என்றபடி.

5. அப்பன் - குருகை காவலப்பன்; இவர் நாதமுனிகளுடைய மாணாக்கர். ரஹஸ்ய
  விசேஷம்- யோகமார்க்கம், மணக்கால் நம்பி -ஆளவந்தாருடைய ஆசாரியர். அப்பன்
  யோகு செய்த இடத்தை, ‘குருகை காவலப்பன் சந்நிதி’ என்று இன்றும் வழங்குவர்.