முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

உலகத

ஏழாந்திருவாய்மொழி - பா. 2

179

உலகத்தில் (மண் ஆதியான) காரணமாயும், (குடம் முதலான) காரியமாயும், (தண்ணீர்கொண்டு வரலாகிற) பலமாயும் வரக் கூடியதான இவற்றுக்கு 1நியந்தாவாக உள்ளவன். இனி, 2‘கிரியா சாதனம், அது அடியாக வரும் கிரியை, அதனால் சாதிக்கப்படுகிற காரியம், இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்குமவன்’ என்றும் ஆம். சீர் அணங்கு - ஸ்ரீயான அணங்கு; பெரிய பிராட்டியார். அணங்கு - தெய்வப்பெண். அன்றியே. ‘சீர் அணங்கு’ என்பதனை, அமரர் கட்கு அடைமொழி ஆக்குதலும் ஒன்று. சீர் அணங்கு அமரர் பிறர் தொழுது ஏத்த நின்று வாரணம் மருப்பு ஒசித்த பிரான் - சேஷத்வத்திற்குத் தகுதியான ஆத்தும குணங்களைத் தரிக்கின்றவர்களாய்ப் பிரகிருதி சம்பந்தம் இல்லாத தன்மையரான நித்தியசூரிகள், இவ்வருகு உண்டான சம்சாரிகள்,இப்படி, ‘சிறியார் பெரியார்’ என்னும் வாசி இன்றிக்கே, எல்லாரும் 3எழுத்து வாங்கி ஏத்தும்படியாக நின்று, 4குவலயாபீடத்தின் கொம்பை வருத்தம் இன்றி முரித்த உபகாரகன். 5‘தரையில் இருக்கும் இராமனுக்கும் தேரில் இருக்கும் அரக்கனுக்கும் சண்டை தகுந்தது அன்று என்று தேவர்கள் கந்தருவர்கள் தானவர்கள் ஆகிய இவர்கள் கூறினார்கள்’ என்பது போன்று, ‘அமரர் பிறர் தொழுது ஏத்த நின்று’ என்கிறார். என் மாதவனே - நான் தோற்ற துறை.

    ‘மாதவனான நாராயணன் எந்தை’ என முடிக்க.              

(2)

_____________________________________________________________

1. நியந்தா -ஏவுகிறவன். ‘காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன்’ என்ற இதனால்,

  ஐம்பெரும்பூதங்களையும், அவற்றின் காரியமான அண்டம் முதலானவற்றையும் அவற்றில்
  வசிக்கிற ஆத்துமாக்களின் செயல்களையும் கூறியபடி.

2. கிரிதா சாதனம் - மட்பிண்டம். தண்டசக்கரங்கள் முதலானவைகள். கிரியை  - தொழில்.
  அதனால் சாதிக்கப்படுகிற காரியம், குடம் முதலான காரியங்கள். இங்குக் கூறிய
  இரண்டாவது பொருளால், நிமித்தகாரணம் முதற்காரணம் துணைக்காரணங்களையும்,
  அவற்றின் காரியமான படைத்தல் முதலான காரியங்களையும், அவற்றால் உண்டான
  தேவர்கள் முதலான பதார்த்தங்களையும் தெரிவித்தபடி.

3. எழுத்து வாங்குகை - தலைவன் பெயரை மார்பிலே எழுதிக் கொள்ளுதல்; அடிமை
  என்பதனைத் தெரிவித்தல்.

4. அகாரத்தின் விவரணமான நாராயண சப்தத்திலே ‘அவ ரக்ஷண’ என்கிற ரக்ஷகத்வமும்
  அர்த்தசித்தமாகையாலே, ‘வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்’ என்று அரிஷ்ட
  நிவர்த்தியையும் இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார். 

5. ஸ்ரீவிஷ்ணு புரா.