முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

182

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

போக்கு வரவு உண்டாமாகில், 1வாலி போன வழியை அடைத்து மஹாராஜர் குறும்பு செய்தாற்போலேயாம்’ என்று நிலையியற் பொருளாக இருந்து. இவரை வர நிறுத்த ஒண்ணாதே இவருக்குமாகத் தான் புகுந்து இருந்தான் ஆதலின், ‘புகுந்து இருந்து’ என்கிறார்.

    ‘புகுந்து செய்த கிருஷி யாது?’ என்னில், தீது அவம் கெடுக்கும் - தீதாவது, பொய்ந்நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகச் செய்து போந்த பாவங்கள்; அவமாவது, ஞானம் பிறந்த பின்பு தம்மை அறியாமல் நேர்ந்தவைகள் ஆக, இவ்விரண்டாலும் பகவானை அடைவதற்குத் தடையாக இருந்த கர்மங்களைச் சொல்லுகிறது. அன்றியே, 2‘பசு வதை செய்தவன் விஷயத்திலும், சுராபானம் செய்பவன் விஷயத்திலும், திருடன் விஷயத்திலும், விரதங்களை நியமம் தவறி நடத்தினவன் விஷயத்திலும், பிராயச் சித்தம் பெரியோர்களால் சொல்லப்பட்டது; நன்றி கெட்டவன் விஷயத்தில் பிராயச்சித்தம் சொல்லப்படவில்லை’ என்கிறபடியே, பிராயச்சித்தம் உள்ள பாவங்களையும் அஃது இல்லாத பாவங்களையும் சொல்லிற்றாகவுமாம். ‘இவற்றைக் கெடுப்பது கஷாயத்தைக் குடிக்கச் செய்தோ?’ என்னில், அமுதம் - தன்னுடைய இனிமையை அனுபவிப்பித்ததாயிற்று.

_____________________________________________________________

1. இச்சரிதப் பகுதியைக் கம்ப ராமாயணம் மராமரப்படலம் செய்யுள் 88 முதல் 100 முடிய
  உள்ள பகுதியில் காண்க. வாலி போன வழி - பிலத்துவாரம்.

2. ஸ்ரீராமா. கிஷ். 33 : 12. இங்கு.

  ‘சிதைவகல் காதல் தாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப்
  பதவிஅந் தணரை ஆவைப் பாலரைப் பாவை மாரை
  வதைபுரி குநர்க்கும் உண்டாம் மாற்றலா மாற்றல்; மாயா
  உதவிகொன றார்க்குஎன் றேனும் ஒழிக்கலாம் உபாய முண்டோ?’

(கம்பரா. கிஷ். 62.)

  ‘ஆன்முலை அறுத்த அறன்இ லோர்க்கும்
  மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
  பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
  வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
  நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
  செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
  அறம்பா டிற்றே.’                        

(புறம்)

  ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
  செய்ந்நன்றி கொன்ற மகற்கு.          

(திருக்குறள்)

  என்பன நோக்கத் தக்கன.