முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

ஏழாந்திருவாய்மொழி - பா. 5

187

விட்டு விளங்காநின்றுள்ள சிவந்த ஒளியினையுடைய தாமரையினைப் போன்றனவாம்; திருமேனி மலர்ந்து விளங்குகிற குளிர்ந்த ஒளியோடு கூடிய மலையினைப் போன்றதாகும்; அழகிய  பாஞ்சஜன்யமானது களங்கம் இன்றி விளங்குகிற சந்திரனைப் போன்றதாம்; திருச்சக்கரமானது சூரியனைப் போன்றதாம்’ என்றவாறு.

    வி-கு : ‘விட்டு இலங்கு செஞ்சோதி’ என்பது, தாமரைக்கு அடை. ‘மதியம்’ என்பதில் அம்’  சாரியை; அன்றி, ‘அம்’ என்பதனைச் சங்கிற்கு அடைமொழி ஆக்கலுமாம்.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. திருமலையாண்டானிடத்தில் எம்பெருமானார் திருவாய்மொழி கேட்டருளுகிற காலத்தில் பாசுரந்தோறும் சில வார்த்தைகளை அருளிச்செய்து, ‘இது அர்த்தம் ஆனாலோ?’ என்றால், ‘இது விஸ்வாமித்திர சிருஷ்டி; ஆளவந்தார் அருளிச்செய்யக் கேட்டறியேன்’ என்று பணிக்குமாம் ஆண்டான். ஆண்டான் ‘இப்பாசுரத்திற்கு விஸ்வாமித்திர் சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ’ என்ன, எம்பெருமானார் 1இப்பாசுரத்தால், தன் அவயவ சௌந்தர்யத்தால் என்னைத் தனக்கு ஆக்கினான் என்கிறார்’ என்று அருளிச்செய்தனராம். அதுவும் கிடக்க, பட்டர், ‘ஆழ்வாரையும் ஆழ்வார் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்ததனால் திருமேனியிற்பிறந்த பேரொளியைச் சொல்லுகிறது’ என்று அருளிச்செய்வர்; ‘நீராட்டம் முடிந்த பின் பல வித மலர்களால் கட்டப்பட்ட மாலை, கலவைச் சந்தனம் இவற்றை அணிந்திருப்பவரும், மிக உயர்ந்த பீதாம்பரத்தைத் தரித்திருப்பவருமான ஸ்ரீராமர், சுத்தமான திருக்குழலை உடையவராய் அந்தச் சிம்மாசனத்தில் அலங்கார இலக்குமியோடு பிரகாசித்தவராய் நின்றார்,’ என்றார் ஸ்ரீ வால்மீகியார்.

_____________________________________________________________

1. ‘மேல் சபரிகரமாகத் தம்மை அங்கீகரித்தது எத்தாலே?’ என்னில், ‘தன்னுடைய அவயவ
  சௌந்தர்யத்தாலே என்கிறார்’ என்பது எம்பெருமானாருடைய திருவுள்ளம். ‘எமர்
  ஏழெழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கின குணத்துக்குத் தோற்று, ‘விட்டிலங்கு’
  என்று இன்னோரன்ன விசேஷணங்களை இட்டு ஏத்துகிறார்,’ என்பது
  திருமாலையாண்டான் நிர்வாஹம்.

  ‘ஆழ்வாரையும் ஆழ்வாருடைய பரிகரத்தையும் அங்கீகரித்த மகிழ்ச்சியினால்
  திருமேனியிற்பிறந்த பேரொளியைச் சொல்லுகிறது’ என்பது பட்டர் திருவுள்ளம். ‘ஆயின்,
  ஒருவரை அங்கீகரித்த மகிழ்ச்சியினால் திருமேனியில் பேரொளி பிறந்த இடம்
  உண்டோ?’ எனின், அதற்குக் காட்டும் மேற்கோள், ‘சுத்தமான திருக்குழலையுடையாய்’
  என்று தொடங்கும் பொருளையுடைய சுலோகம். இந்தச் சுலோகம் ஸ்ரீபரதாழ்வானை
  அங்கீகரித்த பின்னர்த் திருமேனியில் உண்டான அழகைச் சொல்லுகிறது. (ஸ்ரீராமா. யுத்.
  131 : 15.)