முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

210

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

இருக்கிற இருப்பிலே, இச்சேதனன் முக்தனாய்ச் சென்று கிட்டினால், 1‘அஹம் பிரஹ்மாஸ்மி - நான் இராஜ புத்திரன், பிரஹ்ம பிரகார பூதன்’ என்னக்கடவன்; ஆகில், ‘இங்ஙனே வாராய்’ என்றால், அவன் அங்கீகாரம் பெற்று, தாய் தந்தையர்கள் இருந்த படுக்கையிலே குழந்தை சென்று ஏறுமாறு போன்று ‘அவனை இவ்விதமாக அறிந்தவன், அவன்மேல் காலால் ஏறுகிறான்’ என்று ஏறக் கடவனாகச் சொல்லுகிற அப்பேற்றைச் சொல்லுகிறது. 2மூவகைத் துன்பங்களாலே நொந்த சம்சாரி சேதனன், 3‘கோடைக்காலத்தில் குளிர்ந்த தடாகத்தை அடைவது போன்று, பரம்பொருளை அடைந்தவனாய் இருக்கிறான்’ என்கிறபடியே, அப்பெரிய மடுவிலே வீழ்ந்து தன் தாபம் எல்லாம் ஆறுமாறு போன்று, முதலிலே, 4இவை இல்லாதவன் திருவனந்தாழ்வான்மேலே அணைந்து, இவை உண்டாய்க் கழிந்தாரைப் போன்று இருக்கின்றான் ஆதலின், ‘அணைவது’ என்கிறார். விடாயர் மடுவிலே விழுமாறு போலே ஆயிற்று அணைவது. 5சேஷபூதன் அடிமை செய்து அல்லது தரியாதது போன்று, சேஷியும் சேஷபூதனோடே அணைந்தல்லது தரியாதானாய் இருக்கிறபடி. நாற்றம், குளிர்த்தி, மென்மைகளை இயல்பாகவே உடையவனாதலின் ‘அரவு’ என்கிறார். இனி, அணைமேல் அணைவது

_____________________________________________________________

1. ‘அஹம் பிரஹ்மாஸ்மி’ என்ற வாக்கியம் சாமாநாதிகரண்யம் என்று கொண்டு, அதற்குப்
  பொருள் அருளிச்செய்கிறார், ‘நான் ராஜபுத்திரன், பிரஹ்ம பிரகார பூதன்’ என்ற
  வாக்கியங்களாலே. இங்குச் சாமாநாதிகரண்யம், காரிய காரண பாவத்தாலேயாதல், சரீர
  ஆத்ம பாவத்தாலேயாதல் கொள்க. ‘நான் ராஜபுத்திரன்’ என்றது, காரிய காரண
  பாவத்தாலே சாமாநாதிகரண்யம்; ‘பிரஹ்ம்பிரகாரபூதன்’ என்றது, சரீர ஆத்ம பாவத்தாலே
  சாமாநாதிகரண்யம். ராஜபுத்திரன் - பிரஹ்மபுத்திரன் என்றபடி.

2. மூவகைத் துன்பம்- தன்னைப்பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும்,
  தெய்வத்தைப் பற்றி வருவனவுமாம்.

3. பாரதம், மோக்ஷ தர்மம். 4 : 50.

4. இவை இல்லாதவன் - தாபங்கள் இல்லாதவன்; இறைவன்.

5. ‘இவ்வாத்துமா, பிறவிகளிலே பிறந்து நொந்தவன் ஆகையாலே இறைவனைப் பற்றி
  ஆனந்திக்கிறான்; இயற்கையிலே ஆனந்தமயமான இறைவன் இவனைப் பெற்று
  ஆனந்திக்கக் கூடுமோ?’ என்னும் வினாவிற்கு விடையாக, ‘சேஷபூதன்’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார்.