முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

212

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

பிராட்டி, இளையபெருமாள் ஆகய மூவரும் களிக்கின்றவர்களாய் வாழ்ந்தார்கள்’ என்றார் ஸ்ரீ வால்மீகி. ஆக, சொல்லிற்றாயிற்று, சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாகத் திருவனந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை, முக்தப் பிராப்பியபோகம் என்றபடி. இருவர் அவர் முதலும் தானே - பிரமனுக்கும் சிவனுக்கும் காரணனாய் இருப்பான்; 1‘பிரமன் அவன், சிவன் அவன்’ என்கிற பிரசித்தியாலே ‘இருவர் அவர்’ என்கிறார். அம்மோக்ஷ உலகத்தைச் சொல்லுகிற இடத்தில் ‘அணைவது புணர்வது’ என்கையாலே, அது போக பூமியாய் நித்தியமாய் இருக்கும் என்னுமிடமும், இங்கு ‘முதல்’ என்கையாலே, இவ்வுலகத்தில் காரிய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும், இதுதான் ஆவது அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது. இதனால், பிரமனும் சிவனும் 2சம்சார பத்தர்கள் என்னுமிடமும், சர்வேஸ்வரனே மோக்ஷத்தைக் கொடுக்கவல்லான் என்னுமிடமும் சொல்லுகிறது. ஆக, அடையத் தக்கவன் அவனே; பிரமனும் சிவனும் அடையத் தக்கவர்களல்லர் என்கை. 3‘பிரமன் முதல் புழு இறுதியாக உள்ள இவ்வுலகத்துப் பொருள்கள் புண்ணிய பாவ ரூப கருமங்களால் உண்டு பண்ணப்பட்ட சம்சாரத்துக்கு உட்பட்டவைகள்’ என்னாநின்றது அன்றோ? ஆக, இப்படிப் பிரஹ்ம ருத்திரர்களுக்கும் காரணனாய் இருக்கையாலே வந்த மேன்மை உடையவன்.

     எப்பொருட்கும் இணைவன் ஆம் - தேவர்கள் முதலான எல்லாப் பொருள்கள்தோறும் சஜாதீயனாய் வந்து அவதரிப்பவன்; பிரமன் சிவன் இவர்கள் நடுவே வந்து அவதரிப்பது, உபேந்திரன் ஆவது, சக்கரவர்த்தி ஸ்ரீவசுதேவர்கள் அளவிலே அமைத்து வந்து பிறப்பது, மஹாவராஹம் ஆவது, குட்டைமாமரம் ஆவது ஆகாநிற்பன் என்றபடி. ‘இப்படித் தாழ விட்டுப் பிறக்கின்றது எதற்காக?’ என்னில், வீடு முதலாம் - மோக்ஷத்தைக் கொடுப்பதற்காக. ‘அவதரித்த இடங்களிலே, 4‘பறவைக்கு மோக்ஷத்தைக் கொடுப்பது, பிசாசத்துக்கு மோக்ஷத்தைக் கொடுப்பது ஆகாநிற்பன்’ என்றபடி. ‘அவன்

_____________________________________________________________

1. தைத்திரீயநாரா. உப. 11. 

2. சம்சார பத்தர்கள் - சம்சாரத்திலே கட்டுப்பட்டவர்கள்.

3. விஷ்ணு தர்மம்.

4. பறவை - ஜடாயு, பிசாசம் -கண்டாகர்ணன்.