முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

எட்டாந்திருவாய்மொழி - பா. 3

215

பொய்கை யானை இடர் கடிந்த - பரப்பு மாறப் பூத்துக் குளிர்ந்த புனலையுடைத்தான பொய்கையிலே போய்ப் புக்கு முதலையாலே இடர்பட்ட யானையினுடைய துக்கத்தை வாசனையோடே போக்கினவன். இனி, ‘பூவின் செவ்வி அழியாமல் திருவடிகளிலே இடவேண்டும்’ என்று நினைத்து அது பெறாமையால் வந்த இடரைப் போக்கினவன் என்றும், ‘சர்வேஸ்வரன் ஆபத்திற்குத் துணைவன் என்று இருந்தோம்; இவன் இப்படி ஆபத்தை உடையவனாக இருக்க உதவாது ஒழிவதே! அருள் அற்றவனாக இருந்தானே!’ என்று நாட்டிலுள்ளார் நினைக்கில் செய்வது என்?’ என்று அதனாலே வந்த இடரைப் போக்கினவன் என்றும் கூறலுமாம். 1பொய்கை யானை இடர் கடிந்த பூந்தண் துழாய் நாயகன் - வைத்த வளையத்தோடே காணும் மடுவிலே போய் விழுந்தது. ஆனை இடர் கடிந்த பூந்தண் துழாய் நாயகன் - திருத்துழாயின் பரிமளம்போலே காணும் யானையின் இடரைக் கடிந்தது. யானை இடரைப் போக்குகையே அன்றி, தம் இடரைப் போக்கினாற்போலே இவர்க்கு இருத்தலின் ‘இடர் கடிந்த என் தனி நாயகன்’ என்கிறார். புணர்ப்பு - அவனுடைய 3சம்பந்தம். அவனுடைய திருவடிகளில் சம்பந்தம் துக்கத்தையும் போக்கி, ‘சுகமாக இருத்தலையே இலக்கணமாக உடையது’ என்கிற பேற்றையும் தரும்.

    ‘என் தனி நாயகன் புணர்ப்பு நீத்தும்; வீடு முதலாம்’ எனக் கூட்டுக.

(2)

192

        புணர்க்கும் அயன்ஆம்; அழிக்கும் அரன்ஆம்;
        புணர்த்ததன் உந்தியோடு ஆகத்து மன்னிப்
        புணர்த்த திருஆகித் தன்மார்வில் தான்சேர்
        புணர்ப்பன் பெரும்புணர்ப்பு எங்கும் புலனே.

_____________________________________________________________

1. ‘இடர் கடிந்த நாயகன்’ என்றும், ‘பூந்தண் துழாயை உடைய நாயகன்’ என்றும் கூட்டுக.

2. ‘திருத்துழாயின் பரிமளம் போலேகாணும் யானையின் இடரைக் கடிந்தது’ என்னும்
  பொருளில், ‘கடிந்த’ என்னும் பெயரெச்சம் ‘துழாய் என்ற பெயருடன் முடிகின்றது.
  திருத்துழாயின் வாசனை முன்னே வந்து யானையின் இடரைப் போக்கிற்று என்றபடி. 

3. ‘சம்பந்தம்’ என்றது, சம்பந்த ஞானத்தை; இறைவனுக்கும் ஆத்துமாக்குமுள்ள நவவித
  சம்பந்தத்தைக் குறித்தபடி. நவவித சம்பந்தமாவன - சரீரி சரீர சம்பந்தம், பிதா புத்திர
  சம்பந்தம், சேஷி சேஷ சம்பந்தம் முதலாயின.