முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

ஒன

22

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

ஒன்று உண்டாய் ‘அத்தை விலக்கி நாம் பெறல் வேண்டும்’ என்றுதான் செய்கிறாய் அன்றே!’ என்பாள், ‘ஆற்றாமை அழுவோம்’ என்கிறாள். ‘அவனைப் பெறவோ போன நெஞ்சைப்பெறவோ? எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறோமோ?’ என்பாள், ‘சொல்லி அழுவோம்’ என்கிறாள்.

    நீ நடுவே - ‘அல்லாதவற்றுக்கு உள்ளது அமையாதோ உனக்கு?’ என்பாள், ‘நீ’ என்கிறாள். அதாவது, ‘அவனை ஒழிந்த நம்மில் நாம் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிடுகை ஒழிய, நமக்குள் ஒருவரை ஒருவர் வருத்தும் தன்மை உளதோ?’ என்றபடி. ‘நலிகைக்கு ஒரு காரணம் இல்லாதிருந்தும் நலிகின்றாயே?’ என்பாள், ‘நடுவே’ என்கிறாள். வேற்றோர் வகையின் கொடிதாய் - பகைவர்கள் நலிகின்ற வகையைக்காட்டிலும் கொடிதாக நலிகின்றாய். பகைவர்களானாலும் நோவுபட்டாரை ‘ஐயோ!’ என்ன அன்றோ அடுப்பது? எனை ஊழி மாற்றாண்மை நிற்றியோ- காலம் என்னும் ஒருபொருள் உள்ள வரையிலும் பகையிலே நிற்கக்கடவையோ? ‘இராவணன் முதலியோர்கள் பிரித்தார்கள் அத்துணையே, கூப்பிடப் பொறுத்தார்கள்; நீர்மை யுடையார் கண்ணநீரை விழவிட்டார்கள்; நீர்மையுடையார் படியும் கண்டிலோம்; பகைவர்கள் படியும் கண்டிலோம்; உன்னுடைய தன்மை வேறுபட்டதாய் இருக்கின்றதே!’ என்றபடி.

    வாழி - 1காதுகரை ‘உடன் பிறந்தீர்’ என்னுமாறுபோன்று ‘வாழி’ என்கிறாள். கனை இருளே - செறிந்த இருளே! இனி, ‘கனைத்துக் கொண்டு செருக்கி வருகிற இருளே!’ என்று பொருள் கூறலுமாம்.

    இனி, இப்பாசுரத்துக்குப் பொருந்திய பொருளாவது ‘இருள் என்று ஒரு பொருள், அதுதான் ஒளி மழுங்கி, 2அடங்கி இருக்கை அதன் தன்மை என்று அறியாமல், 3காதலரைப் பிரிந்த பிரிவாலே ஒளி மழுங்கி வாய் விட்டுக் கூப்பிடவும் மாட்டாதே நோவு படுகிறதாகக் கொண்டு, ‘உன் இழவு கனத்திருந்ததே! 4வகுத்த எம்பெருமானிடத்தில் யாமெல்லாம் நெஞ்சிழந்து கூப்பிடாநிற்க

_____________________________________________________________

1. காதுகர் - கொலைஞர்.

2. அடங்கியிருத்தல் - வெளியில் புறப்படாமல் இருத்தல்.

3. பகவானைப் பிரிந்த பிரிவாலே ஒளி மழுங்கியிருப்பதாக நினைக்கிறாள்.

4. ‘நாரணற்கு மடநெஞ்சம் தோற்றோம்’ என்பதற்குப் பொருள், ‘வகுத்த
  எம்பெருமானிடத்தில்’ என்று தொடங்கும் வாக்கியம்.