முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

222

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

ஒழுக்கத்தை அநுஷ்டித்துக் காட்ட வந்த அவதாரங்கள். 1‘அந்த இராகவன் உலகினுடைய மரியாதையைச் செய்கிறவன், செய்விக்கிறவன்’ என்றார் ஸ்ரீ வால்மீகி. 2பெரியவன் எதனை எதனைச் செய்கிறானோ, அதனையே மற்றை மக்களும் செய்கிறார்கள்; அப் பெரியவன்  எதனைப் பிரமாணமாக வேண்டுமென்று செய்கிறானோ, அதனையே உலகமும் அநுசரிக்கிறது’, என்பது ஸ்ரீ கீதை. ‘இப்படித் தாழவிட்டு அவதரிக்கிறவன்தான் யார்?’ என்னில், தேவாதி தேவபெருமான் - மனதமணம் பொறாத தேவமணம் பொறாத நித்திய குரிகட்கு அவ்வருகானவன். என் தீர்த்தனே - நல்ல இனிய பொருள்களின் கூட்டம் இருக்க, தாழ்ந்த பொருள்களை விரும்புவாரைப் போன்று, தானும் தன்னுடைய குணங்களும் இருக்க, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றங்கட்கு விஷயமாக உள்ளனவற்றை விரும்பிப் போந்த என்னை அவற்றை விட்டுத் தன்னையே விரும்பும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியையுடையவன். அன்றி, ‘நான் இழிந்து ஆடும் துறை’ என்னுதல்.

(5)

195

        தீர்த்தன் உலகுஅளந்த சேவடிமேல் பூந்தாமம்
        சேர்த்தி அவையே சிவன்முடிமேல் தான்கண்டு
        பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழா யான்பெருமை
        பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே?

    பொ-ரை : ‘அருச்சுனன், உலகங்களை அளந்த தீர்த்தனுடைய செம்மைபொருந்திய திருவடிகளின்மேல் அழகிய மாலையினை அணிந்து, அணிந்த அம்மாலையினையே சிவனுடைய சடையின்மேலே தானே நேரில் கண்டு, கண்ணபிரானே இறைவனாவான் என்று தெளிந்து அறுதியிட்ட பசிய திருத்துழாய் அணிந்த கண்ணபிரானுடைய பெருமை இப்பொழுது மீண்டும் ஒருவரால் ஆராயவேண்டும்படி இருக்கின்றதோ? இன்று’ என்றபடி.

    வி-கு : சேர்த்தி கண்டு தெளிந்தொழிந்த பெருமை என்க. சிவன். மங்களத்தையுடையவன். பார்த்தன் - பிரதையின் புத்திரன். பிரதை  என்பது குந்தியின் பெயர். கிடந்ததே என்பதில் ஏகாரம், எதிர்மறை.

_____________________________________________________________

1. ஸ்ரீராமா. சுந். 35 : 11 இவ்விடத்தில்,

  “அறந்தலை நிறுத்தி வேதம் அருள்சுரந்து அறைந்த நீதித்
  திறந்தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தி”

  என்ற கம்பர் திருவாக்கை நினைவு கூர்தல் தகும்.

2. ஸ்ரீ கீதை, 3 : 21.