முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

கண

எட்டாந்திருவாய்மொழி - பா. 9

231

    கண்ணன் எங்கும் உளன் - இது ஆயிற்று அவன் சொன்ன தப்பு; ‘சர்வேஸ்வரன் எங்கும் உள்ளவன்’ என்றான். 1‘இவ்வுலகம் எல்லாம் என்னால் வியாபிக்கப்பட்டிருக்கின்றன’ என்றும், 2‘யாது ஒன்று இருக்கின்றது, அது என்னை அன்றி இல்லை,’ என்றும் அவ்விறைவன் தான் சொன்னவார்த்தை ஆயிற்று இவன் தான் சொல்லிற்று. என்ற மகனைக் காய்ந்து -3இவ்வார்த்தையைப் பகைவனே சொல்லிலும் கேட்ட போதே காலிலே விழ வேண்டும் வார்த்தை சொல்லிற்று; பிரமாணங்களுக்கு முரணான அர்த்தத்தைச் சொல்லிலும் கொண்டாட வேண்டும்படி ஆயிற்றுச் சம்பந்தம்; பருவத்தாலும் கொண்டாட வேண்டும். வயிற்றிலே பிறந்தவனாய் இருந்தும் திருநாமம் சொல்லப் பொறுக்கமாட்டாமல் சீறினான் ஆதலின், ‘மகனைக் காய்ந்து’ என்கிறார். 4’பள்ளியில் ஓதி வந்ததன் சிறுவன்’ என்ற பாசுரம் இங்கு நினைவு கூர்வது. இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப -‘எங்கும் உளனாகில் நீ சொல்லுகிறவன் இங்கு இல்லையாய் இரானே,’ என்று தூணை

_____________________________________________________________

1. ஸ்ரீ கீதை, 9 : 4.

2. ஸ்ரீ கீதை, 10 : 39. ‘அவன் கூறியது தப்பு அன்றோ? என்ன, ‘சர்வேஸ்வரன் தான்
  ஆதரித்துச் சொன்ன அர்த்தத்தை இவன் கூறியது தப்போ?’ என்கிறார். ‘இவ்வுலகம்
  எல்லாம்’ என்று தொடங்கி.

3. ‘என்ற’ என்றதற்கு பாவம், ‘இவ்வார்த்தையைப் பகைவனே’ என்று தொடங்கும்
  வாக்கியம். ‘மகன்’ என்றதற்கு பாவம், ‘பிரமாணங்களுக்கு முரணான’ என்று தொடங்கும்
  வாக்கியம். ‘மகன்’ என்ற சொல்லுக்கு இளம்பருவம் உடையவன் என்று பொருள்
  கொண்டு, ‘பருவத்தாலும் கொண்டாட வேண்டும்’ என்று அருளிச்செய்கிறார்

4. பெரிய திருமொழி, 2. 3 : 8. இப்பாசுரப்பகுதிக்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்:
  ‘பள்ளியில் ஓதி வந்த - பள்ளியில் ஓதும் பருவத்தில் உள்ளவை அடையக்
  கொண்டாட்டமாய் இருக்கும். அதற்கு மேலே, தன் சிறுவன் - தன் வயிற்றிற் பிறந்தவன்
  வார்த்தை மிகவும் பிரியமாய் இருக்கும். வாயில் ஓர் ஆயிர நாமம் - அதற்கு மேலே
  திருநாமத்தைச் சொல்லிற்று. ஒள்ளியவாகிப் போத - இவை ஒன்றும் இல்லையாகிலும்
  சொன்ன போதை இனிமைதான் கொண்டாட வேணும். ஆங்கதனுக்கு ஒன்றும் ஓர்
  பொறுப்பிலனாகி - அசஹ்ய அபசாரமன்றோ? பிள்ளையைச் சீறி - திருநாமம்
  சொன்னதுவே ஏதுவாகப் ‘புத்திரன் அல்லன்’ என்று விண்டான் அவன்; திருநாமம்
  சொன்னவர்களோடே தமக்கு எல்லா உறவும் உண்டாக நினைத்திருக்கையாலே இவர்
  ‘பிள்ளை’ என்கிறார்.