முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

258

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

மான அசித்து, அலோகம் - இவற்றை அறிகின்ற கருவிகளால் அறியப்படாமல் சாஸ்திரங்களாலே அறியப்படுகின்ற சித்துப் பொருள். மகிழ் கொள்சோதி - எரிக்குந்தன்மையவான ஒளிப் பொருள்கள்; சந்திர சூரியர்கள் எனலுமாம். மலர்ந்த அம்மானே - இப்பொருள்களாய் விரிந்துள்ள சர்வேஸ்வரனே! 1‘பல பொருள்களாக விரிகின்றேன்’ என்கிறபடியே, தன் மலர்த்தியே ஆகையாலே ‘மலர்ந்த’ என்கிறார். சித்து அசித்து இவற்றோடு கூடிய பிரமமே காரணமுமாய்க் காரியமுமாகக் கடவது.

    ‘நீர் சொன்னவை எல்லாம் செய்தமை உண்டு; உமக்கு இப்போது செய்ய வேண்டுவதுதான் என்?’ என்ன, 2மகிழ்கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராய் - என்னுடைய மனமும் உன்னை அனுபவித்து மகிழ்ச்சியை உடைத்தாம்படி செய்யவேண்டும்; என்னுடைய வாக்கின் தொழிலும்  அடிப்படியேயாகச் செய்யவேண்டும்; என்னுடைய செய்கையும் பிரீதியை முன்னிட்டுச் செய்யும் கைங்கரியமாக வேண்டும்: நானும் தனியே அனுபவித்துப் பிரீதியை உடையேனாம் படி பண்ண வேண்டும்; என்றும் இப்படி நான் உன்னை அனுபவிக்கும் படி வரவேண்டும்.          

(6)

207

        வாராய்! உன்திருப் பாத மலர்க்கீழ்ப்
        பேரா தேயான் வந்துஅடை யும்படி;
        தாரா தாய்!உன்னை என்னுள்வைப் பில்என்றும்
        ஆரா தாய்!எனக்கு என்றும்எக் காலே.

    பொ-ரை : உனது அழகிய திருவடித் தாமரைகளில் மீளாமல் யான் வந்து அடையும்படி தாராதவனே! உன்னை என்னுடைய மனத்திலே வைக்குமிடத்தில் ஒருநாளும் அமையாதபடி இருக்கின்றவனே! என்னிடத்தில் எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் வரவேண்டும்.

_____________________________________________________________

1. தைத்திரீய. ஆனந். 6 : 3.

2. ‘மகிழ்கொள்’ என்றதனை, ‘சொல் செய்கை’ என்பனவற்றிற்கும் கூட்டுக.

3. முதல் மூன்று பாசுரங்களால் முக்காரணங்களாலும் விரும்பிய பேறு ‘மகிழ்கொள்’
  என்றதனால் பிரீதி பூர்வமாக வேண்டும் என்னுமதுவும், தாமும் அனுபவித்து
  மகிழவேண்டும் என்னுமதுவும் இப்பாசுரத்தால் விசேஷமாகக் கூறப்பட்ட கருத்துகளாம்.
  மேல் பாசுரத்தைக் காட்டிலும், இப்பாசுரத்துக்கு விசேடம், மூக்கரணங்களோடு தாமும்
  அனுபவித்தல்.