முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

209

262

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

209

        யானே என்னை அறிய கிலாதே,
        யானே என்தன தேஎன்று இருந்தேன்;
        யானே நீ:என் னுடைமையும் நீயே;
        வானே ஏத்தும்எம் வானவர் ஏறே!

    பொ-ரை : என்னை அறியாமல் கேட்டினை விளைத்துக்கொண்டவன் யானே, ‘நீயும் உன்னுடைமையும்’ என்று இருத்தல் அன்றி, ‘நானும் என்னுடைமையும்’ என்று வகுத்துக்கொண்டு இருந்தேன்; யானும் நீயேயாவாய்; என்னுடைமையும் நீயேயாவாய்; நித்திய சூரிகள் துதிக்கின்ற என் நித்தியசூரிகள் தலைவனே!

    வி-கு : ‘அறியகிலாது இருந்தேன்’ என்க. வான - இடவாகு பெயர். ‘ஏத்தும் ஏறு’ என்க. இனி, ஏகாரத்தை அசைநிலையாகக் கொண்டு, ‘யான்  என்னை அறியகிலாது யானே என்றனதே என்றிருந்தேன்’ எனக் கூட்டலுமாம்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘மிக்கார் வேத விமலர் விழுங்கும்’ என்று நித்திய சூரிகள் என்றும் நுகரும்படியைக் கூறினார்; அவர்களோடு ஒத்த சம்பந்தம் தமக்கு உண்டாயிருக்க, இழந்திருக்கிறபடியையும் கருதிக் ‘கேட்டினை அடைந்தேன்’ என்கிறார்.

    யானே - ‘அவன் எதிர் சூழல் புக்குத் திரியாநிற்க, நானே அன்றோ கேட்டினைச் சூழ்த்து கொண்டேன்?’ என்கிறார். ‘என் இழவு பகவானுடைய செயலால் வந்தது அன்று,’ என்பார், ‘யானே’ எனப்பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகிறார். என்னை அறியகிலாதே- அரசகுமரன் வேடன் கையிலே அகப்பட்டுத் தன்னை வேடனாக நினைக்குமாறு போன்று, சர்வேஸ்வரனுக்கு உறுப்பாக இருக்கிற என்னை அறியாமல். யானே என்றனதே என்று இருந்தேன் - 2‘அவனும் அவன் உடைமையும்’ என்று இருக்கை தவிர்ந்து, ‘நானும் என் உடைமையும்’ என்று வகுத்துக்கொண்டு போந்தேன். இப்படி நெடுநாள் போருகிற இடத்தில் ஒருநாள் அநுதாபம் பிறத்தலும் கூடும் அன்றே? அதுவும் இன்றி, செய்யவேண்டுமவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய் நிர்ப்பரனாய் இருந்தேன்

_____________________________________________________________

1. ’பேற்றினை அறுதியிடுகின்ற இச்சமயத்தில் ‘யான் எனது என்னும் செருக்கினால்
  கெட்டுப்போனேன்’ என்று அருளிச்செய்கைக்குக் காரணம் என்னை?’ என்னும்
  வினாவிற்கு விடையாக, ‘மிக்கார் வேதவிமலர்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். 

2. இங்கு ஏகாரம் தேற்றப் பொருளது; பிரிநிலையுமாம்.