முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

264

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

துவத்தால் வந்த உயர்வு தோற்ற இருக்கும் இருப்பு. ‘எனக்கும் அவர்களோடு ஒத்த சம்பந்தம் உண்டாயிருக்க, இழந்து கேட்டினை அடைந்தேன்’ என்பார், ‘எம் வானவர் ஏறே’ என்கிறார். ‘வான்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போல ஆகுபெயராகக் கொள்க.                          

(9)

210

        ஏறேல் ஏழும்வென்று, ஏர்கொள் இலங்கையை
        நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி!
        தேறேல் என்னை;உன் பொன்னடி சேர்த்துஒல்லை;
        வேறே போகஎஞ் ஞான்றும் விடலே.

    பொ - ரை : இடபங்கள் ஏழனையும் வென்று, அழகு கொண்ட இலங்கையை நீறே ஆகும்படி செய்த மிக்க ஒளியையுடைய பரஞ்சோதி! என்னை நம்பாதே; விரைவில் உனது அழகிய திருவடிகளில் சேர்ப்பாய்; உன்னை விட்டுத் தனியே போகும்படி எப்பொழுதும் விடாதே,

    வி-கு : ‘ஏறேல்’ என்பதில் ‘ஏல்’ அசைநிலை. இனி, ‘ஏல் ஏறு’ என மாற்றி, ‘எதிர்த்து நின்ற இடபம்’ எனக் கோடலுமாம்.  நீறு - சாம்பல், புழுதி. விடல் - அல் விகுதி, வியங்கோள் எதிர்மறையின்கண் வந்தது; ‘பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்’ என்புழிப் போன்று கொள்க. ‘வென்று செய்த சோதி’ என முடிக்க.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1‘யானே என்றனதே’ என்று நீர் வருந்தும்படி செய்தோமாகில் உமக்குச் செய்யவேண்டுவது ஒன்று உண்டோ? நீர் இங்ஙனம் கிடந்து படுகிறது எதற்காக?’ என்ன, ‘இதற்காக’ என்கிறார்.

    ஏறேல் ஏழும் வென்று நப்பின்னைப் பிராட்டியினுடைய சேர்க்கைக்குத் தடையாய் இருந்த இடபங்கள் ஏழனையும் வென்று. ஏர் கொள் இலங்கையை - காட்சிக்கு இனியதாய்க் கட்டுடைத்தான இலங்கையை. 2‘இது என்ன வீரியம்! இது என்ன தைரியம்! இராக்ஷச அரசனான இராவணனுக்கு எல்லா இலக்கணங்களும்

_____________________________________________________________

1. “‘யானே என்றனதே’ என்று நீர் வருந்தும்படி செய்தோமாகில் உமக்குச் செய்ய
  வேண்டுவது ஒன்றுண்டோ?” என்றது, ‘முன் நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைத்து
  அநுதபிக்கும்படி செய்த இதற்கு மேற்பட ஒரு பேறு எமக்குச் செய்யத்தக்கது இன்றே?’
  என்றபடி. ‘நீர் இங்ஙனம் கிடந்து படுகிறது எதற்காக?’ என்ன என்றது ‘‘உன் திருப்பாத
  மலர்க்கீழ்ப்,. பேராதே யான் வந்து அடையும்படி, தாராதாய்’ என்று இங்ஙனே படுகிறது
  எதற்காக?’ என்றபடி. ‘உன் பொன்னடி சேர்த்து ஒல்லை’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி
  ‘இதற்காக’ என்கிறார்.

2. ஸ்ரீராமா. சுந். 49 : 17.