முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

முதல் திருவாய்மொழி - பா. 10

27

    ஈடு : பத்தாம் பாட்டு. இவள் துன்பமெல்லாம் தீர வந்து கூடின எம்பெருமானைக் குறித்து, ‘இனி ஒருநாளும் என்னை விடாதொழிய வேண்டும்’ என்கிறாள்.

    வேவ ஆரா வேட்கை நோய் - ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின் ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள். ‘ஆயின்,  உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின், 1 அல்லாது நெருப்பைப் போல அன்று; கேவல அக்நியாகில் 2அதாஹ்யமாயிருக்கும்; காதல் நோயாகிய நெருப்புக்கு உள்ளதொரு தன்மை இது. 3‘வணங்கத் தக்க பிராட்டியீர்! உம்மைப் பார்க்காத காரணத்தால், எரிகின்ற மிகப் பெரிய நெருப்பினால் நெருப்பு மலை எரிவது போன்று வருந்துகிறார். அவ்விராமபிரான்,’ என்றார் வால்மீகி பகவான், ஆக, ‘வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி. மெல் ஆவி உள் உலர்த்த - சரீரத்தில் உண்டான மிருதுத்தன்மை இவட்கு ஆத்துமாவிலும் உண்டாய் இருத்தலின், ‘மெல் ஆவி’ என்கிறாள். உள்ளே பிடித்துப் புறம்பே வர வேவா நின்றதாதலின், ‘உள் உலர்த்த’ என்கிறாள். 4‘காட்டிலுள்ள மரத்தை அம்மரத்தினுள்ளே மறைந்திருக்கும் நெருப்பானது உள்ளே இருந்து எரிந்துகொண்டு வருவது போன்று, சோகமாகிற நெருப்பு, மனக்கவலையாகிற நெருப்போடு கூடி, ஸ்ரீபரதாழ்வானை எரித்தது,’ என்பது ஸ்ரீராமாயணம்.

    ஓவாது இராப்பகல் - வேவ ஆராத வேட்கை நோய் போன்று, இராப்பகலும் ஓவாது ஒழிதலின் ‘ஓவாது இராப்பகல்’ என்கிறாள். உன்பாலே வீழ்த்தொழிந்தாய் - அகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டாய். இனி, இதற்கு ‘உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டு. முகங்காட்டாமல் கடக்க நின்றாய்’ என்று பொருள் கூறலுமாம். இப்பொருளுக்கு

_____________________________________________________________

1. ‘நீங்கின் தெறூஉம் குருகுங்கால் தண்ணென்னும்
  தீயாண்டுப் பெற்றாள் இவள்?

  ‘தொடிற்சுடி னல்லது காமநோய் போல
  விடிற்சுட லாற்றுமோ தீ?’

2. அதாஹ்யமாயிருக்கும் - எரிக்காமலிருக்கும்

3. ஸ்ரீராமா. சுந்த. 35 : 44.

4. ஸ்ரீராமா. அயோத். 85 : 17