முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

278

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

களைப் பாதுகாத்தலிலே முயலாநின்றுள்ள திரு ஆழியை ஆயுதமாக உடையவன் வந்து வாழ்கிற தேசம். 1சர்வேஸ்வரன் கடைக்கணித்துவிட அரைக்கணத்திலே வாராணசியை எரித்து வந்து நின்றவன் ஆதலின், ‘அறம் முயல் ஆழி’ என்கிறார்.

    மறு இல் வண்சுனை சூழ் மாலிருஞ்சோலை புறமலை சாரப் போவது கிறியே - 2‘பெரியோர்களுடைய மனத்தைப் போன்று தெளிந்த தண்ணீரையுடையது’ என்கிறபடியே, மறு அற்று, ஆழ்வார் திருவுள்ளம் போன்று தெளிவையுடைத்தாய், காட்சிக்கு இனியதாய், ஊற்று மாறாத சுனைகளாலே சூழப்பட்ட மாலிருஞ்சோலைப் புறமலை சாரப் போகும் இதுவே பகவானை அடைதலை வேண்டியிருப்பார்க்கு வருத்தம் அற அடையக்கூடிய நல்விரகு.

(5)

217

        கிறிஎன நினைமின் கீழ்மைசெய் யாதே
        உறிஅமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
        மறியொடு பிணைசேர் மாலிருஞ் சோலை
        நெறிபட அதுவே நினைவது நலமே.

    பொ-ரை : தாழ்ந்த விஷயங்களில் விருப்பத்தைச் செலுத்தாமல், உறியிலே பொருந்திய வெண்ணெயினை உண்டவன் வாழ்கின்ற கோயில், குட்டியோடு பெண்மான் சேர்ந்து வாழ்கின்ற மாலிருஞ்சோலைக்குச் செல்லும் வழியிலே பொருந்தும்படி நினைத்தலே நலமாகும்; ஆதலால், இவ்வாறு நினைதலே நல்விரகு என்று நினையுங்கள்.

    வி-கு : ‘செய்யாது நினைவது நலம்’ எனக் கூட்டுக. நினைவது - தொழிற்பெயர். ‘கோயிலாகிய மாலிருஞ்சோலை’ என்க.

    ஈடு : ஆறாம் பாட்டு. ‘திருமலைக்குச் செல்லும் வழியினைச் சிந்தை செய்யும் இதுவே இவ்வாத்துமாவுக்கு நல்லது’ என்கிறார்.

_____________________________________________________________

1. பவுண்டரகவாசுதேவன் கொல்லப்பட்டு இறந்ததை அறிந்த காசி தேசத்து அரசன்,
  கிருஷ்ணனிடத்தில் மாறுகொண்டு ஒரு பூதத்தை ஏவினான்; அதனை அறிந்த கிருஷ்ணன்,
  சக்கரத்தாழ்வானைக் கடைக்கணித்தருள, அது சென்று அந்தப் பூதத்தையும் அதற்குத்
  துணையாய் நின்ற மற்றைப் பூதங்களையும் கொன்று, காசி தேசத்தையும் நீறாக்கி மீண்டது
  என்பது வரலாறு. வாரணசி - காசி.

2. ஸ்ரீராமா. பால. 2.