முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

282

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    ஈடு : எட்டாம் பாட்டு. ‘திருமலையை எப்பொழுதும் வலம் செய்கையே வழக்கு’ என்கிறார்.

    வலஞ்செய்து நாளும் வலம் கழியாதே - சர்வேஸ்வரன் தன்னை அடைகைக்கு உறுப்பாகத் தந்த மனித சரீரத்தைக் கொண்டு வலிமையை உண்டாக்கிப் பின்னை அவனை அடையாமல் இதர விஷயத்தில் ஈடுபடுகைக்கு உடலாக்கிக் கெடாமல். ஆய மாயவன் வலம் செயும் கோயில் - திருச்சித்திரகூடமலையின் பக்கத்தில் பிராட்டியையுங் கூடக் கையைப் பிடித்துக்கொண்டு 1உலாவினாற்போன்று, பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதரத்தோடே சஞ்சரிக்கிற தேசம். இனி, ‘வலஞ்செயும் மாயவன்’ என்பதற்கு, 2‘எவன் தன்னையும் கொடுத்துத் தன்னை அனுபவித்தற்குத் தக்க பலத்தையும் கொடுப்பவனோ’ என்கிறபடியே, 3‘தன்னையும் கொடுத்து, தன்னை நுகர்வதற்குத் தகுதியான சத்தியையும் கொடுக்கும் ஆச்சரியத்தையுடைய கிருஷ்ணன்’ என்று பொருள் கூறலுமாம்.

    வானோர் வலம் செயும் மாலிருஞ்சோலை - பெருமாள் காட்டுக்கு எழுந்தருளுகிற போது இலக்குமணபரதர்கள் பின் தொடர்ந்தது போன்று, சர்வேஸ்வரன் இங்கே போருகையாலே நித்தியசூரிகளும் போந்து வலஞ்செய்கிற மாலிருஞ்சோலை. உகந்தருளின மற்றைத் திவ்விய தேசங்கள் எல்லாம் கிடக்க, திருவேங்கடத்தை 4‘விண்ணோர் வெற்பன்’ என்றார் மேல்; இங்கே இதனை ‘வானோர் மாலிருஞ்சோலை’ என்கிறார்; ‘இதற்கு நினைவு என்?’ எனின், ‘குழந்தைக்குத் தாயினுடைய உறுப்புகள் எல்லாம் கிடக்க முலைக்கண்ணிலே அன்றோ வாய் வைக்கலாகாவது? அப்படியே இங்குத் 5‘தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், என்னும் இவையே முலையாவடிவு அமைந்த, அன்ன நடைய அணங்கு’ என்கிறபடியே, அவை இரண்டும் முலைகள் ஆகையாலே, அவர்களுக்கேயாகி இருத்தலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார், வலஞ்செய்து - நாமும் இவர்களோடே கூட அங்கே அநுகூலமான தொழில்களைச் செய்து.

________________________________________________________

1. உலாவினவன், ஸ்ரீராமபிரான்.

2. யஜூர் வேதம், காண்டம், 7, 5 : 36.

3. வலம் செய்தல் - வலிமையை உண்டாக்குதல்; ‘வலம்’ பலம் என்ற சொல்லின் சிதைவு.
  முதற்பொருளில், வலஞ்செயல் - வலம் வருதல்.

4. திருவாய். 1. 8 : 3.

5. பெரிய திருமடல், 6,7.