முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

284

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

போக்கிக் கொள்ள ஒண்ணாத மஹா பாவங்களைப் போக்க வேண்டி இருந்தீர்களாகில். அழக்கொடி அட்டான் அமர் பெருங்கோயில் - பூதனையை முடித்தவன் ‘இங்ஙனம் ஒத்த விரோதிகள் வந்த போதாக நம்மை 1நெடுங்கை நீட்டாக்கி வைக்க ஒண்ணாது’ என்று நித்திய வாசம் பண்ணுகையாலே கொண்டாடத் தக்க கோயில். அழன் என்று பிணமாய், அத்தால் பேய் என்றபடி.

    மழக்களிறு இனம் சேர் மால் இருஞ்சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே - இள ஆனைக் கன்றுகள் இனம் இனமாகச் சேரா நின்றுள்ள திருமலையைத் தொழவேண்டும் என்னும் எண்ணத்திலே துணிவதே இவ்வாத்துமாவுக்கு வெற்றிக்குக் காரணம். எல்லா இலக்கணங்களும் நிறைந்து இருப்பதொரு யானை நின்ற இடத்தே ஆயிரம் யானைகள் வந்து சேருமாதலின், ‘மழக்களிற்று இனம் சேர்’ என்கிறார். ‘ஆயின், அங்குக் களிறு நிற்கிறதோ?’ எனின், அங்கு நிற்கிறதும் சோலை மழகளிறே அன்றோ?’ ‘தென்னானை’ என்பர் திருமங்கை மன்னன். இதனால், அங்குண்டான விலங்குகளும் ஓர் இனமாய் ஆயிற்று இருப்பது என்பதனைத் தெரிவித்தபடி.            

(9)

221

        சூதுஎன்று களவும் சூதும்செய் யாதே
        வேதம்முன் விரித்தான் விரும்பிய கோயில்
        மாதுறு மயில்சேர் மாலிருஞ் சோலை
        போதுஅவிழ் மலையே புகுவது பொருளே.

    பொ-ரை : வெற்றி என்று நினைத்துச் சூதையும் களவையும் செய்யாமல், முற்காலத்தில் வேதங்களை விரித்துக் கூறிய இறைவன் விரும்பி வசிக்கிற கோயில். பெண் மயில்களோடு கூடிய ஆண் மயில்கள் வசிக்கிற மாலிருஞ்சோலையில் இருக்கிற அரும்புகள் மலர்கின்ற திருமலையில் சென்று சேர்தலே பேறு ஆம்.

    வி-கு : ‘செய்யாது புகுவது பொருள்,’ எனக் கூட்டுக. புதுவது - தொழிற்பெயர். போது - மலரும் பருவத்தையுடைய பேரரும்பு; ‘காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி’ (குறள்) என்ற இடத்துப் போது’ என்பது இப்பொருளையுடையதாதல் காண்க.

_______________________________________________________

1. நெடுங்கை நீட்டாக்கி - மிக்க தூரமாக்கி.

2. திருநெடுந்தாண்டகம்.