முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

முதல் திருவாய்மொழி - முன்னுரை

3

    நாரையாகில் வெளுத்திருக்கியும், அன்றிலாகில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும், கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிகையும், காற்றாகில் வேறுபாடின்றி எப்பொழுதும் திரிகையும், மேகமாகில் நீராய் இற்று இற்று விழுகையும், சந்திரனாகில் தேய்வது வளர்வதாகையும், இருளாகில் பொருள்களைக் காண ஒண்ணாது தடுக்கையும், கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாகையும், விளக்காகில் இற்று இற்று எரிகையும், இங்ஙனம் இவற்றிற்கு இத்தன்மைகள் எப்பொழுதும் உள்ளவை என்று அறியாமல், இவையெல்லாம் தம்மைப்போன்று இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் வருந்தி, துக்கத்தையுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தையுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டு 1ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று, இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து, ‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.

    ‘ஆயின், பறவை கடல் முதலான பொருள்கள் இறைவனைப் பிரியின், அப்பிரிவால் அவற்றிற்குத் துன்பம் உளதாமோ?’ எனில், 2‘வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன,’ என்றும், 3ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளையுடையன ஆயின்,’ என்றும் ஸ்ரீராமாயணத்தில் பேசப்படுவது போன்று, அறிவுடைப்பொருள் அறிவில் பொருள் என்னும் வேற்றுமையின்றி எல்லாப் பொருள்களையும் நோவுபடுத்தக்கூடியவன், இவள் பிரிந்த இறைவன் என்க.

____________________________________________________________

1. ‘மூடி வேவாநின்றதோர் கொள்கலம் மூய்த்திறந்தவிடத்து ஆவி எழுந்து முன் நின்ற 
  வெப்பம் நீங்கினாற்போன்று, அச்சொல் சொல்ல, ஆற்றாமை பண்டையின் சிறிது
  அளவுபடுவதாம்,’ என்னும் களவியலுரை ஈண்டுச்சிந்தித்தல் தகும்.

2. ஸ்ரீராமா. அயோத். 59 : 4.

3. ஸ்ரீராமா. அயோத். 59 : 5.