முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

இரண்டாந்திருவாய்மொழி - பா. 2

37

'அல்லது இல்லை ஓர் கண்’ என்கிறார். ‘ஆயின், மற்றைத் தேவர்களும் காப்பவர்களாகக் கூறப்படுகின்றனரே?’ எனின், மாலைக்கண் என்று இருப்பார்க்கு அல்லாதவை எல்லாம் மாலைக்கண்ணாகத் தோற்றும். திண்ணம் - இது திடம். 2‘சத்தியம் சத்தியம்; மீண்டும் சத்தியம்; கைகளை மேலே தூக்கிச் சொல்லுகிறேன்; வேதமாகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் மேலான பிரமாணம் இல்லை; அது போன்று கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறு இல்லை’ என்றார் ஸ்ரீ வியாச பகவான். ஆதலின், இவரும் ‘திண்ணம்’ என்கிறார்.

    ‘நம் கண்ணன் கண்’ என்கையாலே விதிமுகத்தால் பரத்துவமும், ‘அல்லது இல்லை’ என்கையாலே மறைமுகத்தாலே பரத்துவமும் அருளிச்செய்தார்.  

(1)

123

        ஏஎபா வம்!பர மே!ஏழ் உலகும்
        ஈபா வம்செய்து அருளால் அளிப்பார்ஆர்?
        மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்
        கோபால கோளரி 3ஏறுஅன் றீயே?

    பொ - ரை : ‘பிரமனுடைய தலையினைக் கிள்ளியதனால் உண்டான பெரிய தீவினையானது விட்டு நீங்குபடி, சிவனுக்குப் பிச்சையினைப் பெய்து அவனைக் காப்பாற்றிய, கோகுலத்திற்பிறந்தார்க்கு எல்லாம் வலிய ஆண் சிங்கத்தினை ஒத்த கிருஷ்ணனை அன்றி, உலகங்கள் ஏழிலும் உள்ள அவ்வவ்வுயிர்கள் செய்த தீவினைகளையெல்லாம் போக்கி அவற்றை அருளோடு காப்பாற்றுகின்றவர் வேறு யாவர்? ஐயோ! பாவம்! இவ்வுண்மையினைக் கூறல் நம்மைச் சார்ந்து ஆவதே!’ என்கிறார்.

    வி - கு : ‘ஏஎ’ என்பது, இரக்கத்தின்கண் வந்தது. பரம் - பாரம்; கடமை.
ஈ - அழித்தல். ‘தழல் - அழல்; மலர் - அலர்’ என்பன போன்று, ‘வீ’ என்பது மெய்ம்முதல் கெட்டு ‘ஈ’ என உயிர்

_____________________________________________________________

1. மாலைக் கண் என்றிருப்பார்க்கு - திருமாலே காப்பாற்றுகிறவன் என்று
  இருப்பவர்கட்கு; மால் - திருமால். மாலைக்கண்ணாய் - இரவில் பொருள்களைக்
  காணமாட்டாத கண்களைப் போன்று, அதாவது, இரவில் கண்கள் பயன்படாதவாறு
  போன்று, மற்றைத் தேவர்களும் காக்கும் தகுதியரல்லர் என்று தோற்றும் என்றபடி.
 

2. காசியில் செய்த சூளுறவு.

3. ‘வழிபடுவோரை வல்லறி தீயே’ (புறம். 10.) என்புழி, ‘வல்லறிதியே’ என்பது
  ‘வல்லறி தீயே’ என நீண்டு வந்தது போன்று, ஈண்டும் ‘ஏறன்றியே’ என்பது ‘ஏறன் றீயே’
  என செய்யுள் இசை நிறைக்க நீண்டு வந்தது. ‘ஏறன்றியே’ என்பது முன்னுள்ள பாடம்.