முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1 3 0

50

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

130

        காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
        சேர்க்கை செய்துதன் உந்தி உள்ளே
        வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
        ஆக்கினான் தெய்வ உலகுகளே.

    பொ-ரை : எல்லா உயிர்களையும் பாதுகாத்தலையே தனக்கு இயல்பாகவுடையவன் கண்ணபிரானாகிய நம் இறைவன்; அவன், அழிக்கும் காலம் வந்தவாறே, எல்லா உயிர்களையும் தன் திருமேனியில் சேரச் செய்து, பின்னர், தனது திருநாபிக்கமலத்திலே, எல்லாக்குணங்களும் பொருந்திய பிரமனையும், இந்திரனையும், தேவர்களையும், தேவர்களுக்குரிய உலகங்களையும் உண்டாக்கினான்.

    வி - கு : ‘தன உந்தியுள்ளே ஆக்கினான்’ எனக் கூட்டுக. சேர்க்கை செய்தல் - அழித்தல்; ஒரு சொல். இனி, தன் திருமேனியில் சேர்தலாகிய தொழிலைச் செய்து என்று பொருள் உரைத்து இதனை இருசொல்லாகக் கோடலுமாம்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் இம்முத்தொழிலையும் 1தன் அதீனமாம்படி இருக்கின்றான் ஆதலானும், இவனே இறைவன்,’ என்கிறார்.

    காக்கும் இயல்வினன் - 2‘செல்வங்களைக் கொடுப்பதிலும் ஆபத்துக்களை நீக்குவதிலும் ஆடவர் திலகனான திருமகள் கேள்வனைத் தவிர, வேறு ஒருவரும் ஆற்றலுடையவராகக் காணப்படுகின்றார் இலர்,’ என்கிறபடியே, காப்பாற்றுதலை இயற்கையாகவுடையவன். கண்ண பெருமான் - காப்பாற்றும்பொருட்டுக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்த இறைவன். சேர்க்கை செய்து - அழிக்கிற காலம் வந்த அளவில், காரிய வடிவமான இவ்வுலகங்கள் முழுதும் தன் பக்கலில்

____________________________________________________________

1. ‘அதனால்,
  இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
  எம மார்ந்தநிற் பிரிந்து
  மேவல் சான்றன எல்லாம்
  சேவலோங் குயர்கொடி யோயே!”

  ‘இவையும் உவையும் அவையும் பிறவுமாய் நின்கண் நின்று பிரிந்து நின்னால்
  ஏமமுற்றனவெல்லாம் பின்னும் நின்னோடு மேவல் அமைந்தன,’ என்றது, உலகுயிர்களின்
  தோற்றமும் நிலைபெறும் ஒடுக்கமும் நின் கண்ண என்றவாறாம்.’ (பரி. 4. உரை) என்ற
  பகுதி ஒப்பு நோக்கத்தகும்.