முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

இரண்டாந்திருவாய்மொழி - பா. 10

51

சேர்தலாகிய செயலைச் செய்து. 1தன் உந்தியுள்ளே - தன்னுடைய திருநாபிக்கமலத்தில். வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் தெய்வ உலகுகள் ஆக்கினான் - பிரமன் இந்திரன் மற்றும் உண்டான தேவர்களோடே கூட அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களையும் கட்டளைப்பட உண்டாக்கினான். இறைவன், 2பிரமனைப் படைத்து அவனை நோக்கி, ‘உலகத்தை எல்லாம் படைப்பாய்’ என்று ஒருகால் ஏவிவிட்டால் பின்னைத் தன்னையும் கேட்க வேண்டாதபடி படைத்தலின் ஆற்றல் வாய்த்தவனாதலின் ‘வாய்த்த திசைமுகன்’ என்கிறார்.

(9)

131

        ‘கள்வா! எம்மையும் ஏழுல கும்நின்
        உள்ளே தோற்றிய இறைவ!’ என்று
        வெள்ளே றன் நான்முகன் இந்திரன் வானவர்
        புள்ளூர் திகழல் பணிந்துஏத் துவரே.

    பொ - ரை : வெண்மை நிறம் பொருந்திய இடபத்தை வாகனமாகவுடைய சிவனும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும், ‘கள்வனே! எங்களையும் மற்றை உலகங்ளையும்  நின்னிடத்தினின்றும் தோன்றச்செய்த இறைவனே!’ என்று, கருடவாகனத்தையுடைய இறைவனுடைய திருவடிகளை வணங்கித் துதிப்பார்கள்.

    வி-கு : ‘கள்வா, இறைவ’ என்பன விளிப்பெயர்கள். ‘என்று பணிந்து ஏத்துவர்,’ என முடிக்க. ஊர்தி - ஊர்கின்றவன்; ஆண்பாற் பெயர். இத்திருப்பாசுரத்தின் முதலிரண்டு அடிகளைப் பரிபாடல் மூன்றாம் பாட்டின் முதல் பதினாறு அடிகளோடு ஒப்பு நோக்கல் தகும்.

    ஈடு : பத்தாம் பாட்டு. ‘இவ்வளவும் வர. நான் கூறிவந்த பரத்துவத்தை, நீங்கள் அடையத் தக்க தெய்வங்களாக நினைந்திருக்கிற அவர்களுடைய 3மேலெழுத்தைக் கொண்டாயினும் நம்புங்கோள்,’ என்கிறார்.

_____________________________________________________________

1. ‘பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
  விரிகமல உந்தியுடை விண்ணவனை’

  என்றார் இளங்கோவடிகள்.

2. முதற்பத்து, ஐந்தாந்திருவாய்மொழி, மூன்றாம் பாசுரத்தின் உரைப்பகுதி ஈண்டு நினைவு
  கூர்க. பக். 181

3. ‘மேலெழுத்தைக்கொண்டு’ என்றது, இத்திருப்பாசுரத்தின் முதல் இரண்டடிகளில்
  கூறப்படும் பொருளை நோக்கியது.