முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

60

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

தானும்  கைங்கரியத்திற்கு விஷயமாக உள்ள யானும், இனி, ‘தானும் யானும்’ என்பதற்கு, ‘என்னைப் பெறுகைக்கு நெடுநாள் எதிர்சூழல் புக்கு விடாய்ப்பித்த தானும், ‘வாயுந் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில், ‘கண்ணாற்கண்ட பொருள்கள் அடங்கலும் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாக நினைத்து விடாய்த்த நானும்’ என்றும், ‘கிருஷி செய்த தானும், கிருஷிக்கு விஷயமாக உள்ள நானும்’ என்றும் பொருள் கூறலும் ஆம்.

    எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் -1‘ஆயிரத்தில் ஒன்றும், கடலிற்குளப்படியும் போலே, தானும் நானும் ஆன சேர்த்தியிலே எல்லா ரசங்களும் பிறக்கும்படி கலந்தோம்; நித்திய விபூதியிற் சென்று புகினும் இப்பேற்றை அசையிட்டு இருக்குமித்தனை; அங்கு ஏற்றமாகச் செய்யலாவது இல்லை; இதனுடைய பிரவின்மையே அங்குள்ளது,’ என்பார், ‘கலந்தொழிந்தோம்’ என்கிறார். இனி, பரமபதத்திற்குப் போகத் தேடுவது, உசாத்துணைக்காவும், இச் சேர்த்தி இடைவீடு இன்றி இருத்தற்குமாம். ‘நன்று; என்போலே கலந்தோம்?’ என்னில், ‘தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்’ என்கிறார். இதற்கு, ‘ஒரு சாதிப் பொருள்கள் தம்மில் ஒன்றனோடு ஒன்று கலந்தது போன்று கலந்தோம்’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பொருள் அருளிச்செய்வர். அதாவது, தேனும் தேனும் கலந்தாற் போலவும், பாலும் பாலும் கலந்தாற்போலவும், கன்னலும் கன்னலும் கலந்தாற்போலவும் அமுதும் அமுதும் கலந்தாற்போலவும் என்பதாம்.

    2இதற்கு இவற்றைச் சுவையுடைப்பொருள்களுக்கு எல்லாம் உபலக்ஷணமாக்கித் ‘தானும் நானுமாக கலவிக்குள்ளே எல்லா ரசங்

_____________________________________________________________

1. ‘ஆயிரம் என்ற எண்ணுடன் ஒன்று என்ற எண்ணும், கடல் நீருடன் குளப்படி நீரும்
  சேர்ந்தது போன்று’ என்பதாம். இவ்வுவமைகள் இறைவனுடைய ஞான ஆனந்தங்களின்
  மிகுதியையும், ஆழ்வாருடைய ஞான ஆனந்தங்களின் சிறுமையினையும் காட்ட வந்தன.
  குளம்பு அடி - குளப்படி: ‘ஒரு விலங்கானது வைத்த குளம்பினது அடிச்சுவட்டில் தங்கிய
  நீர்’ என்பது பொருள்.

2. ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘தானும் யானும் எல்லாம் தன்னுள் தேனும்பாலும் நெய்யும்
  கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தொழிந்தோம்’ என்று கூட்டிப் பொருள் காண்க.
  எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘தானும் யானுமான தன்னுள் (கலவிக்குள்) தேனும்
  பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் எல்லாம் ஒத்து (உண்டாம்படி) கலந்தொழிந்தோம்’
  எனக் கூட்டிப் பொருள் காண்க.