முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

முதல் திருவாய்மொழி - பா. 1

7

நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி. அப்படியே அன்றோ இவளைப் பெற்ற தாயும் கண்ணுறங்காதே படும்படி? இமையோடு இமை கொட்டாதவர்களாய் எப்பொழுதும் இறைவனைப் பார்த்துக்கொண்டேயிருப்பவர்கள் நித்தியசூரிகள் ஆதலின், ‘அமர் உலகும் துஞ்சிலும்’ என்கிறாள்.

    நோயும் பயலைமையும் - மனத்தின் துன்பமும் அத்தாலே வந்த பசலை நிறமும். தன் பக்கலிலே காண்கையாலே அவ்விரண்டும் நாரைக்கும் உண்டு என்றிருக்கிறாள். மீதூர - விஷம் ஏறியது போன்று உடம்பிலே பரக்க. எம்மே போல் - ‘இப்படித் துன்பப் படுகைக்கு நான் ஓருத்தியும் என்று இருந்தேன்; நீயும் என்னைப் போல் ஆவதே! துக்க பரிபவங்களைப் பொறுத்திருக்கையாலும். பற்றிற்று விடாதிருக்கிறபடியாலும், பசலை நிறத்தாலும், என்னைப் போன்று இராநின்றாய்,’ என்றபடி. நீயும் -விரகதாபத்தின் வியசனம் பொறுக்கமாட்டாத மென்மையையுடைய நீயும். 1‘பகைவர்களுடைய பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீராமபிரான், பாணங்களாலே இலங்கையை அழித்து என்னைப் அழைத்துச்செல்லின், செல்லும் அச்செயல் அவ்விராமபிரானுக்கு ஒத்ததாக இருக்கும்’ என்று கூறி இருந்த பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மேபோல் நீயும்’ என்கிறாள்.

    திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே - ‘நோயும் பசலையும் இருந்தபடி கண்டேனுக்கு, நீயும் நான் அகப்பட்ட துறையிலே அகப்பட்டு நெஞ்சு பறியுண்டாயாகாதே! மைந்தனை மலராள் மணவாளனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்பாள். ‘திருமாலால்’ என்கிறாள். ‘தோற்புரை அன்றியே, மறுபாடுருவ 2வேர்ப்பற்றிலே நோவுபட்டாய் ஆகாதே! என்பாள், ‘நெஞ்சம் கோட்பட்டாயே’ என்கிறாள்.                        

(1)

____________________________________________________________

1. ஸ்ரீராமா. சுந். 9 : 30.

2. வேர்ப்பற்று - நெஞ்சு. எல்லாவற்றுக்கும் காரணமாகையாலே நெஞ்சை ’வேர்ப்பற்று’
  என்கிறார். தோற்புரை - உடல், மறுபாடுருவல் - பின்னே உருவிப்போதல்.