1 3 7
மூன்றாந்திருவாய்மொழி - பா. 5 |
71 |
137
இனியார் ஞானங்களால்
எடுக்கல்எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே!
என்கடற்படா அமுதே!
தனியேன் வாழ்முதலே!!
பொழில்ஏழும் ஏனம்ஒன்றாய்
நுனியார் கோட்டில்
வைத்தாய்! 1நுனபாதம் சேர்ந்தேனே.
பொ - ரை :
எத்தகைய பெரியோர்களுடைய ஞானங்களாலும் அளவிட்டு அறிய முடியாதபடி இருக்கின்ற என் நாயனே! பத்தி
நிறைந்து அதனால் கனிந்த மனம் உடையவர்களுக்கு மோக்ஷ சுகமானவனே! எனக்குக் கடலில் உண்டாகாத
அமிர்தம் போன்றவனே! யான் பெற்ற இப் பேற்றுக்கு மூல காரணம் ஆனவனே! உலகங்கள் ஏழனையும் ஒப்பற்ற
வராக அவதாரமாகிக் கூர்மை மிக்க தந்தத்தில் வைத்துத் தூக்கி வந்தவனே! இப்பொழுது உன்னுடைய
திருவடிகைளைச் சேர்ந்ததேனே அன்றோ?
வி-கு :
இப்பாசுரம் பூட்டுவிற்பொருள்கோள். ‘இனி, சேர்ந்தேனே’ எனக் கூட்டுக. அன்றி, ‘இனியார்’ என்பதனை
ஒரு சொல்லாகக் கொண்டு, இனியார் - இனியர் அல்லாதார்; அதாவது, அன்பு இல்லாதார் என்று
பொருள் கூறலுமாம். ஞானம் பல வகைப்படுதலின், ‘ஞானங்களால்’ என்கிறார். கனிவார் - வினையாலணையும்
பெயர். முதல் - காரணம். சேர்ந்தேனே - ஏகாரம் தோற்றப்பொருளது.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. 2‘ஞான லாபமே அமையுமோ? பேறு வேண்டாவோ?’ என்ன, ‘எனக்குப்
3பிரதம சுக்ருதமும் நீயேயாய், என்னைச் சமுசாரிகளில் வேறுபட்டவன்ஆக்கின அன்றே
பெற்றேனே அன்றோ?’ என்கிறார்.
யார் ஞானங்களால்
எடுக்கல் எழாது எந்தாய் - தன் முயற்சியால் அறியப் பார்க்குமன்று எத்துணை மேம்பட்டவர்களுடைய
ஞான விசேடங்களாலும் பெயர்க்கப் பெயராது இருக்கின்ற என் நாயனே!
_____________________________________________________________
1. ’உன்பாதம் சேர்ந்தேனே’
என்பதும் பாடம்.
2. ‘தனியேன் வாழ்முதலே!
இனி நுனபாதம் சேர்ந்தேனே!’ என்ற பதங்களைக் கடாக்ஷித்து,
இரண்டாம் பாசுரத்தோடு கூட்டி அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘ஞான லாபமே
அமையுமோ?’ என்றது, ‘அறியாதன அறிவித்து என்றதனை நோக்கி.
3. பிரதம சுக்ருதம் - ஆதியில்
உண்டான புண்ணியம்.
|