முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

78

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

கார்முகிலே - வள்ளன்மையினைப் பற்றிக் ‘கார்முகிலே’ என்கிறார். என் கண்ணா - தன்னைக் கொடுத்தபடி. நின் அலால் இலேன் காண் - உன்னை ஒழிய அரைக்கணம் பிழைக்க மாட்டேன். இனி, இதற்கு, ‘உன்னை ஒழிய வேறு ரக்ஷகரை உடையேன் அல்லேன்’ என்று பொருள் கூறலுமாம். என்னை நீ குறிக்கொள் - உன்னை ஒழிந்த அன்று அறிவு அற்ற பொருளாகக் கிடக்கும் என்னை, இவ்வயிருக்குத் தாரகனாய் இருக்கிற நீ பார்த்தருள வேண்டும்; திருவுள்ளம் பற்றல் வேண்டும்’ எனலுமாம்.

(7)

140

        குறிக்கொள் ஞானங்க ளால்எனை ஊழிசெய் தவமும்
        கிறிக்கொண்டு இப்பிறப் பேசில நாளில்எய் தினன்யான்
        உறிக்கொண்ட வெண்ணெய்பால் ஒளித்துண்ணும் அம்மானபின்
        நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர்கடிந்தே.

    பொ - ரை : உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயினையும் பாலினையும் மறைந்திருந்து புசித்த இறைவனுக்குப் பின்னே அவன் சென்ற வழியே சென்று திரிகின்ற நெஞ்சை உடையேனாய்ப் பிறவயினது துன்பத்தைக் கடிந்தேன்; ஆதலால், இயமம் நியமம் முதலிய எண்வகை உறுப்புகளை மேற்கொண்டு செய்வதனால் உளவாய ஞானங்களால் பல காலங்களாக ஈட்டப்படுவதான பரபத்தியை இறைவனுடைய திருவருளாகிய நல்ல உபாயத்தைக் கொண்டு இப் பிறப்பிலேயே சில நாள்களில் யான் அடைந்தேன்.

    வி - கு : ‘நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித்துயர் கடிந்தேன்; ஆதலால், தவத்தின் பலத்தை இப்பிறப்பே சில நாளில் எய்தினன்’ என்று கூட்டுக. கடிந்து - முற்று. “கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும், தொல்லது விளைந்தென நிலம் வளங் கரப்பினும்’ (புறம். 203) என்புழிப் போன்று ஈண்டு, கடிந்து என்பதும் ‘கடிந்தேன்’ என்னும் பொருட்டாய் நின்றது, இனி, இதனை எச்சமாக்கி, ‘கடிந்து எய்தினன்’ என முடித்தலுமாம். ஈண்டுத் தவம் என்றது, தவத்தாற் பெறும் பேற்றினை; தவத்தாலாய பயனைத் தவம் என்றார். ‘குறி’ என்றது, இயமம் நியமம் முதலிய எட்டினை; குறித்துக்கொள்ளப்படுதலின் அவற்றைக் ‘குறி’ என்றார். குறித்தல் - கருதுதல். ‘எனை’ என்பது, ‘எத்தனை’ என்ற சொல்லின் மரூஉ. கிறி - உபாயம்.