முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1 1 2

8

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

112

        கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே!
        சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
        ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்
        தாட்பட்ட தண்துழாய்த் தாமம்கா முற்றாயே?

    பொ - ரை : கூர்மை பொருந்திய அலகினையுடைய அன்றிற் பறவையே! கொள்ளப்பட்ட மனத்தினையுடையையாகி, நீண்டு செல்லுகின்ற நள்ளிரவிலும் படுக்கையிற்சேராது வருந்துகிறாய்; ஆதிசேஷ சயனத்தையுடைய இறைவனது திருவடிகளிலே பொருந்தியிருக்கின்ற திருத்துழாய் மாலையினை, அடிமைப்பட்ட யான் விரும்பியது போன்று நீயும் விரும்பினாயோ?

    வி - கு : ‘அன்றில்’ என்பது, ஒரு பறவை விசேடம்; இது நெய்தல் நிலத்தில் வாழுமியல்பினது. ‘ஆய், சேராது, இரங்குதி, என முடிக்க. யாமம் - நள்ளிரவு; இது, ஒரு நாளில் 40 நாழிகைக்குமேல் 50 நாழிகை முடிய உள்ள காலம். ‘பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம்’ (சிந். 1595) என்புழிக் ‘கள்’ அசைநிலை ஆயினவாறு போன்று, ஈண்டு ‘யாமங்கள்’ என்பதில் ‘கள்’ அசைநிலை. இனி, இதனை, பன்மை விகுதியாகக் கொண்டு, இரவின் கூறுபாடாகிய மூன்று யாமங்களையும் கூறுகின்றாள் என்று கோடலுமாம். ‘காமம் உற்றாய்’ என்பது ‘காமுற்றாய்’ என வந்தது, விகாரம்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1இப்படி நாரையைப் பார்த்து வார்த்தை சொல்லுகின்ற அளவிலே, அருகே நின்ற பனையிலே தங்கின அன்றிலானது வாயலகு நெகிழ்த்தவாறே கூப்பிட்டது; அதனுடைய துன்பத்தைக் காட்டுகின்ற ஒலியைக் கேட்டு, ‘பாவியேன் என்னைப்போல நீயும் அகப்பட்டாயாகாதே!’ என்கிறாள்.

    கோள்பட்ட சிந்தையையாய் - கவரப்பட்ட மனத்தினையுடையையாகி; ஆயின், ‘கவரப்பட்ட மனம்’ என்று அறிந்தபடி என்?’ என்னில், அதனுடைய2 அடியற்ற ஒலிதான் ‘நெஞ்சு இழந்தது’ என்று தோற்ற நின்றதுகாணும் இவளுக்கு. கூர் வாய அன்றிலே - தனியராய் இருப்பாரை இரு துண்டமாக இட வல்ல ஒலியையுடைய அன்றிலே!3 வாய் - வார்த்தை. அன்றி, ‘கூர்த்த வாய் அலகினை

_____________________________________________________________

1. ‘கூர் வாய அன்றிலே, எம்மேபோல் தாமம் காமுற்றாயே?’ என்றதனை நோக்கி
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. அடி - மனம்.

3. வாய் - ஆகுபெயர்.