முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

என

84

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

என்று அகல வேண்டாத இவ்வுடம்பை உடையார் திரளிலே போய்ப் புக்கு நெருக்குப் பெறுவது என்றோ!.

    துளிக்கின்ற வான் இந்நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான் - மழையினைப் பெய்கின்ற ஆகாயம், அதனால் விளையக் கூடிய இந்தப் பூமி இவற்றைக் 1கடற்கரை வெளியில் நோக்கியது போன்று, திவ்ய ஆயுதங்களைத் தரித்து நோக்குகிற ஆச்சரியத்தையுடையவன். பரமபதத்தில் ஆபரணங்களாகக் காட்சி அளிக்கிற இவை இங்கு ஆயுதங்களாகக் காட்சி அளிப்பன ஆதலின், அளித்தற்குச் சுடர் ஆழியினையும் சங்கையும் கருவிகளாக ஒதினார்.

    அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ - ‘இவ்வாறு காக்கின்ற அக்காத்தல தொழிலுக்குத் தோற்றிருப்பராய், அவ்விறைவனைப் போன்றே அடையத் தக்கவருமாய், இறைவனுடைய நற்குணங்களுக்குத் தேசிகராய் இருப்பாருமாய், தம் அனுபவங்களை ஒருவர்க்கொருவர் உணர்த்திக்கொண்டு கலந்து பழகுவதற்குத் துணையாக இருக்கின்றவர்களுமாய் உள்ள நித்திய சூரிகளுடைய குழாங்களைச் சென்று சேர்வது எப்போதோ!’ என்கிறார். 2‘கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று, இவரும் ‘அத்திரளில் போய்ப்புகப்பெறுவது என்றோ!’ என்கிறார். ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச்செய்கின்றது.      

(10)

_____________________________________________________________

1. பாண்டி நாட்டினின்றும் ஸ்ரீ வைஷ்ணவர் சிலர் வந்து நம்பிள்ளையைக் கண்டு வணங்கித்
  ‘தேவரீர், எங்களுக்குத் தஞ்சமாக இருப்பது ஒரு வார்த்தையருளிச்செய்யவேண்டும்,’
  என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ‘கடற்கரை வெளியை நினைத்திருமின்’ என்று
  அருளினார். அவர்களும் ‘மணற்குன்றையும் காவற்காட்டையும் நினைத்திருக்கவோ?’
  என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் புன்முறுவல் செய்து அருளிச்செய்தபடி:
  ‘சக்ரவர்த்தி திருமகன் கடற்கரையில் படைவீடு செய்திருக்கும் போது ஸ்ரீவானரவீரர்கள்
  இராகவார்த்தே பராக்ராந்தராய்த் தங்களை உபேக்ஷித்துப் பெருமாளையே
  நோக்கிக்கொண்டு கிடக்க, இவர்கள் கண்ணுறங்குந்தனையும் தான் உறங்கி, இவர்கள்
  கண்ணுறங்கினவாறே அம்பறாத் தூணியை முதுகிலே கட்டித் திருக்கையிலே பிடித்த
  சார்ங்கமும் திருச்சரமுமாய் இராமுற்றும் நோக்கின சக்கரவர்த்தி திருமகனுடைய
  திருவடிகளே தஞ்சமென்று இருமின்,’ என்று அருளினார். ஆகையால், ஸ்வ ரக்ஷண
  சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக்கொண்டு ரஷிக்கும் என்றபடி’ என்ற
  நம்பிள்ளையில் இத்திருவாக்கு ஈண்டு ஒப்பு நோக்குக.

2. கலியர் - பசியினையுடையவர்.