முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

நான்காந்திருவாய்மொழி - பா. 1

93

யாலே துடித்த துடிப்பு ஆடல் ஆனாற்போலே, 1‘பண்ணை வென்ற இன்சொல் மங்கை’ ஆதலின், ஆற்றாமையாலே கூப்பிட்ட கூப்பீடு பாட்டாய் விழாநின்றது. 2‘அழகானவளும் மதுரமான வார்த்தையுடையவளும்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி. ‘பாடிப்பாடி’என்ற அடுக்கு, முதல் கூப்பீடுபோல அன்றி, இரண்டாம் கூப்பீடு தளர்ந்ததிருத்தலையும் தெரிவிக்கும்.

    கண்ணீர் மல்கி - உருகிய மனம் இசையாய்ப் பெருகி, மிக்கது கண்ணநீராய்ப் பெருகுகிறபடி. 3நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ணீரே அன்றோ? மங்குதல் - மிகுதல். 4‘தாமரை இதழ்களினின்றும் விசேடமாகப் பாய்கிற தண்ணீர் போன்று, ஆனந்தக்கண்ணீர் பெருகும் படியான கண்களில் துக்கக் கண்ணீர் எதற்காகப் பெருகுகிறது?’ என்றார் ஸ்ரீவால்மீகி. இங்கு ‘ஆனந்தக் கண்ணீருக்குத் தகுதியான கண்களிலே சோகக் கண்ணீர் பெருகிறது 5யார் குடி வேர் அற?’ என்று பட்டர் அருளிச்செய்வர். 6‘யாரைச் சேதநராகக் கொண்டு?’என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பர். 7‘பாவியேன், யான் வந்த இவ்வரவு, உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லையே!’ என்று இரங்குகிறான் திருவடி.

    எங்கும் நாடி நாடி - தன் ஆபத்தே செப்பேடாக, வருதற்கு உரித்து அல்லாத திக்குகளையும் பார்க்கிறாள். நினைவின்றியே

_____________________________________________________________

1. திருச்சந். 105.

2. ஸ்ரீராமா. சுந். 64 : 15.

3. ‘அகம் கரைந்தால் கண்ணீர் மல்கக் கூடுமோ?’ என்னும் வினாவிற்கு விடையாக ‘நெஞ்சு
  ஒழிய’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார் ‘முடியானே’ என்ற திருவாய்மொழியின்
  பொருளை ஈண்டு நினைத்தல் தகும்.

4. ஸ்ரீராமா. சுந். 33 : 4.

5. ‘யார் குடி வேர் அற?’ என்றது, இராவணன் குடி வேர் பறியவோ, இராக்காதர்கள் என்று
  சொல்லப்படுகிற எல்லாருடைய குடிகளும் வேர் பறியவோ?’ என்றபடி.

6. ‘யாரைச் சேதநராகக் கொண்டு?’ என்றது, ‘யாருடைய இன்பத்திற்காக?’ என்றபடி.
  சேதநன் -இன்பத்தை நுகர்கின்றவன். ‘தாமரை இதழிலே முத்துப்பட்டாற்போன்று
  இருக்கிற இந்த அழகினை அனுபவித்தற்குத் தக்கவரான பெருமாள் அருகில்
  இல்லாதிருக்க, இக் கண்ணீருக்குப் பயன் யாது?’ என்பது கருத்து.

7. பாவியேன் - ஐயகோ! உடைய பெருமாள் - அடையத்தக்கவரான ஸ்ரீராமபிரான்.