முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
10

    வி - கு : ‘பரஞ்சோதி’ என்ற சொல் நான்கடிகளிலும் வந்தது, சொற்பொருட்பின் வருநிலையணி. ‘நீ பரமாய்ப் பரஞ்சோதி’ என மாறுக. ‘இகழ்ந்தது இன்மையின் ஓவி நிகழ்கின்ற பரஞ்சோதி’ என முடிக்க.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1’நம் பக்கல் முதல் அடியிடாத உலகத்தாரை விடும்; உலகத்தாருக்கு வேறுபட்டவரான நீர் பேசினாலோ?’ என்ன, ‘என்னாலேதான் பேசப்போமோ?’ என்கிறார்.

    பரமாய்ப் பரஞ்சோதி நீ - பரமாய்க்கொண்டு மேலான ஒளி உருவனாயிருக்கின்றாய் நீ. வடிவழகிலேயாதல் செல்வத்திலேயாதல் சிறிது ஏற்றமுடையான் ஒருவனைக் கண்டால், ‘உன் தனை ஒளியுடையான் ஒருவனில்லை; உன் தனைச் செல்வமுடையான் ஒருவனில்லை,’ என்பர்களன்றோ? அங்ஙனன்றி, ‘இனி ஒரு வடிவில் அவையில்லை’ என்னும்படி பூர்ணமாக உள்ளது இறைவன் பக்கலிலேயாதலின், ‘பரமாய்ப் பரஞ்சோதி’ என்கிறார். 2’அந்தப் பரப்பிரஹ்மத்தினுடைய பேரொளியால் இவையெல்லாம் பிரகாசிக்கின்றன,’ என்பது கடோபநிடதமாகும். நின் இகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற பரஞ்சோதி நீ - உன்னையொழிய வேறொரு மேலான ஒளிப்பொருள் இல்லாமையாலே உபமானம் அற்றவனாய்கொண்டு நடக்கின்ற மேலான பேரொளி உருவன் நீ. உலகத்தில் ஒருவனோடு ஒத்தாரும் ஒருவனோடு மேற்பட்டாரும் பலர் இருக்கவும், ஒருவரைப் பார்த்து ‘உனக்கு ஒத்தாராதல் மிக்காராதல் உளரோ?’ என்பர்களன்றோ? அங்ஙனல்லன் இறைவன்’ என்பார், ‘நின் இகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி இன்மையின் படி ஓவி நிகழ் நின்ற பரஞ்சோதி நீ,’ என்கிறார்.

____________________________________________________

1. ‘உலகத்தார் செய்யும் துதிகள் அங்குத்தைக்குத் தாழ்வோயாமித்தனை,’ என்று
  மேல் பாசுரத்தில் கூறிய பின், இப்பாசுரத்தில் தாம் ‘உரைக்க மாட்டேன்’
  என்னும் போது ‘நீர் சொல்லும்’ என்று இறைவன் கூறியதாக
  இருக்கவேண்டும் என்று திருவுள்ளம் பற்றி, ‘நம் பக்கல்’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். ‘உலகத்தாருக்கு வேறுபட்டவர்’ என்றது, ‘மயர்வற
  மதிநலம்’ அருளப்பெற்றவராகையாலே வேறுபட்டவர் என்றபடி.