முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
114

வ

வான் என்?’ எனின், 1‘முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ!’ என்று திருமுகத்தினழகையும் திருமுடியினழகையும் சேர்த்து அனுபவித்தது போன்று, குணங்களுக்கும் செல்வங்களுக்கும் உண்டான சேர்த்தியாலே குணங்களோடு ஒக்கச் செல்வத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார். பொரு இல் சீர்ப் பூமி என்கோ-ஒப்பில்லாத பொறுமை முதலிய குணங்களையுடைய பூமி என்பேனோ! இனி, 2‘பூமி திருவடியிலே பிறந்தது’ என்கிறபடியே பூமி அடியிலே பிறந்துடையது ஒன்று ஆகையாலே ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்கிறார் என்னுதல். திகழும் தண் பரவை என்கோ-காரணத்தின் அடியாக வந்த புகரையுடைத்தாய்ச் சிரமத்தைப் போக்குகிற தண்ணீர் என்பேனோ! மேற்கூறிய பூமியானது வன்மையாயிருப்பது ஒன்றாதலின், அந்தப் பூமியைக் காரியங்கொள்ளும்போது வன்மையை நெகிழ்த்துக்கொள்ள வேண்டுமன்றே? அந்த வன்மையை நெகிழ்த்துக்கொடுப்பது தண்ணீராதலின், அதன் பின்னர்த் தண்ணீரை அருளிச்செய்கிறார். தீ என்கோ-மேல் நோக்கி எரிகின்ற நெருப்பு என்பேனோ! அந்நெகிழ்ச்சி காரியங்கொள்ளவொண்ணாத அளவானால், அந்நெகிழ்ச்சியை வலிக்கப்பண்ணித்தருவது தீ ஆதலின், தண்ணீரின் பின் தீயை அருளிச்செய்கிறார்.

    வாயு என்கோ - காற்று என்பேனோ! அந்நெருப்பு உறைத்தால் அதனை ஆற்றச்செய்வது காற்று ஆதலின், தீயின் பின் காற்றினை அருளிச்செய்கிறார். நிகழும் ஆகாசம் என்கோ-எல்லார்க்கும் மூச்சு விடுகைக்கு இடம் தருகின்ற ஆகாசம் என்பேனோ! இனி, நிகழுதல் - உள்ளதாதல்; அதாவது, ‘இவ்வருகில் நான்கு பூதங்களும் அழிந்து தன் பக்கல் வருமளவும் உளதாயிருத்தல்’ என்றாதல்; அன்றியே, ‘பொருள்களெல்லாம் தன் பக்கலிலே தங்கியிருக்கும்படி இடங்கொடுத்தல்’ என்றாதல்.

____________________________________________________

1. திருவாய்மொழி, 3 : 1 : 1.

2. ‘திண்சுட ராழி யரங்கேசர் திக்குத் திருச்செவியில்
  மண்கழ
லில்சத்ய லோகம் சிரத்தில் மருத்துயிரில்
  தண்கதிர் உள்ளத்தில் வானுந் துயில்செந் தரணிகண்ணில்
  ஒண்கன லிந்திரன் வாழ்முகப் போதி லுதித்தனரே.’

  என்றார் திவ்வியகவியும்,

(திருவரங்கத்து மாலை, 8.)

      ‘பொருவில் சீர்ப்பூமி’ என்பதற்குக் கூறும் பொருள் வகை இரண்டனுள்
  முதற்பொருளில், ‘பொரு இல்’ என்பது, சீர்க்கு அடை; இரண்டாவது
  பொருளில், பூமிக்கு அடை.