முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
115

ஆக

ஆக, காரணமான ஐம்பெரும்பூதங்களையும் அருளிச்செய்தார். நீள் சுடர் இரண்டும் என்கோ - காரியமான கூட்டத்துக்கு அடைய உபலக்ஷணமாகச் சந்திர சூரியர்களைச் சொல்லுகிறார். 1'இவற்றின் நீர்க்களிப்பையறுக்கைக்கும் தாபத்தை ஆற்றுகைக்கும் படைத்த சந்திர சூரியர்களைக் கூறுகின்றார்,’ என்றபடி. 2இகழ்வு இல் இவ்வனைத்தும் என்கோ - ஒன்று ஒழியாமே எல்லாம் என்பானோ! 3'எல்லாப் பூதங்களுக்கும் காரணமான வித்து யானே; என்னை அன்றிச் சராசரங்கள் இல்லை,’ என்றான் இறைவனும். இனி, இவைதாம் சில பொருள்களாகத் தோன்றுகை யன்றிக்கே அவனுடைய செல்வமாகத் தோன்றுகையாலே, விடத்தக்கது ஒன்றுமின்றிக் கொள்ளத்தக்கனவாகவே இருத்தலின், ‘இகழ்வு இல்’ இவ்வனைத்தும்’ என்கிறார் என்னுதல். கண்ணனைக் கூவுமாறு - கண்ணனைச் சொல்லும் வகை. ‘கண்ணனைக் கூவுமாறு’ என்பதனைப் ‘புகழும் நல் ஒருவன் என்கோ!’ என்பது முதலானவற்றோடு தனித்தனியே கூட்டுக. ‘அவனுக்கேயுரிய நாமத்தையிட்டுக் கண்ணனைக் கூவவொண்ணாதோ? ‘பூமி’ என்பான் என்?’ எனின், அருச்சுனன், ‘ஏ கிருஷ்ண’ என்றத்தோடு தாம் ‘பொரு இல் சீர்ப் பூமி’ என்றத்தோடு ஒரு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு.

(1)

257

கூவுமாறு அறிய மாட்டேன்,
    குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவுசீர் மாரி என்கோ!
    விளங்குதா ரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
    ஞானநல் ஆவி என்கோ!
பாவுசீர்க் கண்ணன் எம்மான்
    பங்கயக் கண்ண னையே.
 

__________________________________________________

1. ‘நீர்க்களிப்பை அறுத்தற்குப் படைத்த சூரியன்’ என்றும், ‘தாபத்தை
  ஆற்றுகைக்குப் படைத்த சந்திரன்’ என்றும் கூட்டிப் பொருள் கொள்க.
  நீர்க்களிப்பு - நீரால் உண்டாய பசை.

2. ‘இகழ்வில்’ என்பதற்கு, ‘ஒன்றும் ஒழியாமல்’ என்றும், ‘இகழ்ந்து
  தள்ளப்படாத’ என்றும் இரு வகையான பொருள் கொள்க.

3. ஸ்ரீ கீதை, 10 : 39.