முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
133

என

என்?’ எனின், 1‘உலகத்தில் மங்களம் பொருந்திய செல்வத்தையுடைய பொருள்கள் எவை உண்டோ, அவையெல்லாம் என் ஒளியின் ஒரு கூற்றிலிருந்து உண்டானதாக நீ அறிவாய்,’ என்று பகவானும் கூறினானன்றோ? ஊனம் இல் மோக்கம் என்கோ - குற்றமில்லாத மோக்ஷம் என்பேனோ! ‘சரீரமான ஆத்தும அனுபவ மாத்திரத்தில் அன்றி, சரீரியளவும் செல்லும்படி அநுசந்திக்கையாலே, பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம்’ என்பார், 2’ஊனமில் மோக்கம்’ என்கிறார். ஒளி மணி வண்ணனை - விபூதியைச் சொல்லுகிற இவ்விடத்தில் ‘ஒளிமணி வண்ணன்’ என்று அவன் தனக்கேயுரிய விக்கிரகத்தைச் சொல்லுகிறது; இதனால், இவ்வசாதாரண விக்கிரகத்தைப் போன்று இருக்கிறதாயிற்று மேற்கூறியவையெல்லாம் என்பதனைத் தெரிவித்தபடி.

(7)

263

ஒளிமணி வண்ணன் என்கோ!
    ஒருவன்என்று ஏத்த நின்ற
நளிர்மதிச் சடையன் என்கோ!
    நான்முகக் கடவுள் என்கோ!
அளிமகிழ்ந்து உலகம் எல்லாம்
    படைத்துஅவை ஏத்த நின்ற
களிமலர்த் துளவன் எம்மான்
    கண்ணனை மாய னையே.

    பொ-ரை : ‘காத்தலையே ஆதரித்து உலகமெல்லாவற்றையும் படைத்து, அவ்வுலகங்கள் ஏத்தும்படியாய் நின்ற, தேனையும் மலரையுமுடைய திருத்துழாய் மாலையைத் தரித்த எம்பெருமானாகிய, ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடைய கண்ணபிரானை, ஒளி பொருந்திய மாணிக்கம் போன்ற வடிவையுடையவன் என்பேனோ! ஒப்பற்றவன் என்று துதிக்கும்படி நின்ற சந்திரன் பொருந்திய குளிர்ந்த சடையையுடைய சிவபெருமான் என்பேனோ! நான்கு முகங்களையுடைய பிரமன் என்பேனோ! யாது என்பேன்?’ என்றவாறு.

    வி-கு : ‘ஏத்த நின்ற சடையன்’ என்க. ‘மகிழ்ந்து படைத்து ஏத்த நின்ற துளவன்,’ எனக் கூட்டுக.

___________________________________________________ 

1. ஸ்ரீ கீதை, 10 : 41.

2. ‘ஊனம்’ என்றது, சங்கோசத்தினை - குறைவினைச் சொல்லுகிறது. இதனால்,
  கைவல்ய இன்பத்தினின்றும் வேறுபடுத்தியபடி.