முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
134

    ஈடு : எட்டாம் பாட்டு. 1உலகத்தில் முதன்மையினையுடையவரான பிரமன் சிவன் முதலியோர்களை விபூதியாகவுடையனானபடியைப் பேசுகிறார்.

    ஒளி மணி வண்ணன் என்கோ - 2மேலே கூறின வடிவழகு பின்னும் நாடினபடி. ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர் மதிச்சடையன் என்கோ - ‘இவன் உலகத்துக்குப் பிரதாநன்’ என்று அறிவிலிகள் ஏத்தும்படியாய், குளிர்ந்த மதியையும் சடையுமுடைய சிவன் என்பேனோ! மதிச்சடையன் - 3தலையான மதியையுடையவன். ‘ஏத்துகின்றவர்களுடைய மயக்கமேயன்றி, அவன் பக்கல் ஒன்றுமில்லை,’ என்பார், ‘சடையன்’ என்கிறார். நான்முகக் கடவுள் என்கோ - அவனுக்குங்கூடத் தந்தையான நான்முகனான தெய்வம் என்பேனோ! அளி மகிழ்ந்து உலகமெல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற - ‘பாதுகாத்தலையே ஆதரித்து உலகங்கள் முழுதையும் உண்டாக்கி அவை ஏத்த நின்ற. ‘யாதொரு பிரயோஜனத்தை நினைத்துப் படைத்தான்? அந்தப் பிரயோஜனத்தைப் பெற்று நின்றான்’ என்பார், ‘படைத்து அவை ஏத்த நின்ற’ என்கிறார். களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனை - மதுவையும் பூவையுமுடைத்தான திருத்துழாய் மாலையையுடையனாய், அம்மாலையாலே என்னைத் தனக்கே உரியவனாம்படி எழுதிக்கொண்டவனுமாய், எனக்குச் சுலபனுமாய், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுடையவனுமானவனை.

(8)

264

கண்ணனை மாயன் றன்னைக்
    கடல்கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
    அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணிநன்கு உறைகின் றானை
    ஞாலம்உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
    யாவையும் எவரும் தானே.

_________________________________________________ 

1. ‘ஒருவன் என்று ஏத்த நின்ற’ என்றது முதலானவற்றைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. கூறியது கூறல் ஆகாமைக்கு ‘மேலே கூறின வடிவழகு பின்னும் நாடின படி’
  என்கிறார்.

3. தலையான மதி - சிலேடை: சிறந்த ஞானம், தலையிலேயுள்ள சந்திரன்.