முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
167

அனுபவ

அனுபவிக்கும்படியாக அவதரித்தான்,’ என்றபடி. படி - திருமேனி; 1‘படிகண்டு அறிதியே’, 2‘செவ்விப் படிக்கோலம்’ என்பன அருளிச்செயல். 3‘பல படிகளாலும் இவர்களை நாம் பாதுகாக்க வேணும்,’ என்று அவன் வந்து அவதரித்தால் ஒரு படியாலும் திருந்தாதபடியே அன்றோ இவர்கள் படி இருப்பது? ‘ஆயின், பல படிகளால் அவதரிக்குமோ?’ எனின், 4‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாமலிருக்கிற சர்வேசுவரன் இச்சையடியாக அநேக விதங்களாக மற்றைய இனத்தினனாய் வந்து அவதரிக்கிறான்,’ என்றும், 5‘அந்தப் பரமாத்துமாவினுடைய சரீரமானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாயது அன்று,’ என்றும், 6‘அந்தப் பரமாத்துமாவுக்குச் சதை கொழுப்பு எலும்பு இவைகளால் உண்டான இவ்வுலக சம்பந்தமான சரீரம் இல்லை,’ என்றும், 7‘கல்பந்தோறும் கல்பந்தோறும் உம்முடைய திருமேனியோடு அவதரித்தவராய் அடைந்தவர்களான எங்களைக் காப்பாற்றவேண்டும்,’ என்றும், 8‘முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற, பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்’ என்றும், 9‘பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம், போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டு உலாம் நீல நீர்மை’ என்றும் சொல்லுகிறபடியே பல படிகளாலே அன்றோ திருவவதரிப்பது?

    ‘பல விக்கிரஹங்களாலே’ என்றபடி. இப்படிப் பிறவா நின்றாலும், 10‘பிரபுவான கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும் தன்மையை அடையவில்லை; யோனியிலும் வசிக்கவில்லை’ என்கிற

_____________________________________________________

1. திருமேனி என்பதற்கு மேற்கோள் ‘படிகண்டறிதியே’ என்பது முதலாயின.
  இது, முதல் திருவந். 85.

2. இரண்டாந்திருவந். 82.

3. ‘பலபடிகளாலும்’, ‘ஒருபடியாலும்’ என்பனவும் சிலேடை: பொருள் மேலே
  கூறப்பட்டது.

4. யஜூர்வேதம். ஆ. பிர, 3. 8 : 17.

5. பாரதம்

6. பாரதம்

7. பாரதம், மௌஸல பர்வம்

8. பெரிய திருமொழி, 4. 9 : 8.

9. திருச்சந்தவிருத்தம், 44.

10. பாரதம்