முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
18

கல

கல்யாண குணங்களை எங்குமொக்க 1விளாக்குலை கொண்டதுமில்லை. ‘கடலிலே ஒரு மழைத்துளி விழுந்தால், கடலை எங்கும் வியாபிக்க மாட்டாதே? அதைப்போன்று தன் சத்பாவத்துக்கும் அழிவில்லை,’ என்றபடி.

    போது வாழ் புனந்துழாய் முடியினாய் - பூவையுடைத்தாய், தன்னிலத்திலே நின்றாற்போன்று செவ்வி பெற்று வாழாநின்றுள்ள திருத்துழாயைத் திருமுடியில் உடையவனே! 2’திருத்துழாய் பூ முடி சூடி வாழாநிற்கிறது’ என்றபடி. இவ்வொப்பனை என்னால் பேசலாயிருந்ததோ! பூவின்மேல் மாது வாழ் மார்பினாய் - தாமரைப்பூவை இருப்பிடமாக உடைய பெரியபிராட்டியார் பூ அடி கொதித்துப் போந்து வசிக்கின்ற மார்வையுடையவனே! இவ்வொப்பனையை ஒப்பனையாக்கும் அவளுடைய சேர்த்திதான் என்னாலே பேசலாயிருந்ததோ! ‘பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்குமன்றாயிற்று, இவளும் இம்மார்வைவிட்டுப் பிறந்தகமான தாமரையை நினைப்பது’ என்பார், ‘பூவின்மேல் மாதுவாழ் மார்பினாய்’ என்கிறார். ‘பிராட்டி பிரிந்திருக்கிலன்றோ வைத்த வளையம் சருகாவது?’ என்றபடி. என் சொல்லி யான் வாழ்த்துவன் - ‘வேதங்களுங்கூட ஏங்குவது இளைப்பதாகாநிற்க, இவ்வொப்பனைக்கும் இச்சேர்த்திக்கும் என்னால் பாசுரமிட்டுச் சொல்லலாயிருந்ததோ!’ என்கிறார்.

(6)

____________________________________________________
 

1. விளாக்குலை கொள்ளுதல் - எங்கும் ஒக்க நிறைதல். ‘விளாக்குலை
  கொண்டதுமில்லை, புறம்பு போயிற்றதுமில்லை,’ என்றபடி. ‘ஆனால்,
  சம்பந்தத்திற்குப் பயன்தான் யாது?’ என்ன, அதற்கு விடையாகக் ‘கடலிலே’
  என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அதாவது, “தனக்குச் சத்தை
  சித்திப்பதே பலம்,’ என்றபடி. இந்தச் சுலோகம். ஸ்ரீரங்கராஜ ஸ்தவம். 1 : 12.

      ஆக, ‘சாதுவாய்’ என்றதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச்
  செய்தபடி. ஒன்று, பொருளை இருந்தபடியே காட்டுதல்; இரண்டு சாதுவான
  புகழ் என்று புகழுக்கு அடைமொழி; மூன்று, சத்தை பெறுகைக்காக என்றபடி.
  சத்பாவம் - உண்மை.

2. ‘திருத்துழாய் பூ முடி சூடி வாழாநிற்கிறது’ என்பது ரசோக்தி.