முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
185

    கருமமும் கருமபலனும் ஆகிய - புண்ணிய பாவ ரூபமான கர்மங்களுக்கும் கர்மபலங்களுக்கும் ஏவுகின்றவனாய்; 1கருமங்கள் உண்டானாலும் கருமங்களைச் செய்கின்றவன் ஒருவன் வேணுமே? ஆதலின். ‘கருமங்களைச் செய்கின்றவனுமாயிருக்கின்றான்’ என்பார், ‘கருமமும் ஆகிய’ என்கிறார்; என்றது, ‘கருமங்களைச் செய்கின்றவன் வழியாகக் கருமங்களை நிர்வஹிக்கிறவன்’ என்றபடி. கருமங்களைச் செய்தாலும் அவற்றிற்கு ஒருவன் பலன் கொடுக்காத போது அவை பழுதையைப் போன்று கிடக்குமத்தனையேயன்றோ, அவை அசேதநக்கிரியை ஆகையாலே? ஆதலால், ‘அவற்றிற்குப் பலத்தைக் கொடுக்கின்றவனுமாய் இருக்கிறான்,’ என்பார், ‘கரும பலனுமாகிய’ என்கிறார். காரணன்தன்னை - புண்ணியங்களைச் செய்யத் தூண்டவும் பாவங்களைப் போக்கவும் அவற்றிற்குப் பலன் கொடுக்கவும் ஒரு தலைவன் வேண்டுமே? அவற்றிற்குக் காரணனாயும் உள்ளவனை. திரு மணிவண்ணனை - 3உபாசகனுக்கு விக்கிரஹத்தைப் பற்றுக்கோடாகச் சொல்லாநின்றதேயன்றோ? ஆதலின், அவனுக்கு உத்தேஸ்யமாய் இருந்துள்ள விக்கிரஹத்தையுடையவனை; ஒளி மிக்கிருந்துள்ள நீலமணி போலே சிரமத்தைப் போக்குகிற வடிவையுடையவன் என்றபடி. திரு - ஒளி. செம் கண் 3மாலினை - அகவாயில் வாத்சல்யத்துக்குப் பிரகாசகமான திருக்கண்களையுடையவனை; 4காரணப் பொருளுக்கு இலக்ஷணமாகத் தாமரைக்கண்ணனாய் இருக்குந் தன்மையை விதியாநின்றதேயன்றோ?

_____________________________________________________ 

1. கர்மங்கட்கு ஏவுகின்றவனாயிருத்தல் யாங்ஙனம்?’ என்னும் வினாவிற்கு
  விடையாகக் ‘கர்மங்கள் உண்டானாலும்’ என்று தொடங்கி, அருளிச்
  செய்கிறார். ‘உண்டானாலும்’ என்றது, ‘சாஸ்திர சித்தமானாலும்’ என்றபடி.
  ‘கர்மங்கள் தாமே பலன்களைக் கொடுக்கின்றன என்றால் என்?’ என்னும்
  வினாவிற்கு விடையாகக் ‘கருமங்களைச் செய்தாலும்’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். பழுதை - கயிறு. அசேதநக் கிரியை - அறிவில்லாத
  கருமங்கள். ஆக, கருமத்துக்கு நிர்வாஹகனாகையாவது, கர்மங்களைச்
  செய்கின்றவனுக்கு அந்தர்யாமியாய்க்கொண்டு செய்வித்து நிர்வஹித்தல்; கர்ம
  பலத்துக்கு நிர்வாஹகனாகையாவது, ‘பலத்தைக் கொடுக்கின்றவர்களுக்கு
  அந்தர்யாமியாய் நிர்வஹித்தல்’ என்றபடி.

2. உபாசகன் - முமுக்ஷீ.

3. மால் - வியாமோஹம்; அதாவது, வாத்சல்யம்.

4. ‘காரணன்தன்னை செங்கண் மாலினை’ என்று சேர்த்துப் பொருள்
  அருளிச்செய்கிறார், ‘காரணப்பொருளுக்கு’ என்று தொடங்கி. இவ்விடத்தில்,
  ‘மால்’ என்பதற்குச் ‘சர்வாதிகன்’ என்பது பொருள். ‘விதியாநின்றதேயன்றோ’
  என்றது, ‘வேதம் விதிக்கின்றது,’ என்றபடி. என்றது, ‘தஸ்யயதா கப்யாசம்
  புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ’ என்ற வேதவாக்கியத்தைத் திருவுள்ளம் பற்றி.