முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
197

மூர

    மூர்த்தி - பிரம ருத்திரர்களுடைய சரீரங்களையும் ஆத்துமாக்களையும் தனக்குச் சரீரமாகக்கொண்டு, 1அவற்றில் உள்ளுயிராய் நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்தும், தன் உருவத்தோடு நின்று பாதுகாத்தலைச் செய்தும் போருகிற சர்வேசுவரன். ‘ஆயின், மூர்த்தி என்னும் சொல் சர்வேசுவரனைக் காட்டுமாறு யாங்ஙனம்?’ எனின், மூர்த்தி என்னும் சொல், பரத்துவத்தைக் கூறுவதாம். அன்றியே, பிரமன் உருத்திரர் இவர்களோடே இந்திரனையுங் கூட்டி மூவர் என்று சொல்லவுமாம்.

    ‘மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவராகிய மூர்த்தி பின்னும் வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய், வெளிப்பட்ட இவற்றை, செய்ய சூழ் சுடர் ஞானமாய்ப் படைத்தான்: செய்ய தாமரைக் கண்ணனாய், உலகு, ஏழும் உண்ட அவன்கண்டீர்: ஆன பின்பு, அவனைப் பரவுமின்,’ எனக் கூட்டுக.

(1)

279

மூவர் ஆகிய மூர்த்தி யைமுதல்
    மூவர்க் கும்முதல் வன்தன்னைச்
சாவம் உள்ளன நீக்கு வானைத்
    தடங்க டற்கிடந் தான்தன்னைத்
தேவ தேவனைத் தென்னி லங்கை
    எரிஎ ழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்க யத்தடங்
    கண்ண னைப்பர வுமினோ.

    பொ-ரை : ‘மூவராகிய மூர்த்தியை, தலைவர்களான அம்மூவர்க்கும் காரணமானவனை, அவர்களிடத்திலிருக்கின்ற சாபங்களை நீக்குகிறவனை, அகன்ற திருப்பாற்கடலில் சயனித்திருப்பவனை, நித்தியசூரிகளுக்குத் தலைவனை, தெற்கே உள்ள இலங்கையானது நெருப்புப் பற்றி எரியும்படியாக அழித்த வில்லையுடையவனை, பாவங்களைப் போக்குகின்றவனை, தாமரை போன்ற விசாலமான அழகையுடைய கண்களையுடையவனைத் துதி செய்ம்மின்,’ என்கிறார்.

_____________________________________________________

1. ‘முன்னுரு வாயினை நின்திரு நாபியின் முளரியின் வாழ்முனிவன்
   தன்னுரு வாகி இருந்து படைத்தனை பலசக தண்டமுநீ
   நின்னுரு வாகி யளித்திடு கின்றனை நித்த விபூதியினால்
   என்னுரு வாகி யழிக்கவும் நின்றனை ஏதமில் மாதவனே!’

  (வில்லி பார. பதின்மூன். 220) என்பது இங்கு ஒப்பு நோக்கத்தகும்.