முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
210

சு

சுவை ஒலி பரிசம் ஆகியவைகள் எல்லாம் எனக்குத் தானேயாய் நின்ற. எம் வானவர் ஏற்றை - நித்தியசூரிகளுக்கு எல்லா விதமான இனிய பொருள்களும் தானேயாய் நிற்குமாறு போன்று, எனக்கும் ஆகி நின்றான். அன்றி மற்று ஒருவரை யான் இலேன்-வேறு ஒருவரை உத்தேஸ்யமாக உடையேன் அல்லேன். 1’இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில், எழுமைக்குமே - 2காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும். அவன் நித்தியசூரிகள் பக்கலிலே இருக்கக்கடவ இருப்பை என் பக்கலில் இருக்க, நான் வேறொன்றை இனிய பொருளாக நினைத்திருப்பேனோ? அவர்கள் அவனை ஒழிய வேறொன்றை இனிய பொருளாக நினைக்கில் அன்றோ நான் வேறொன்றை இனிய பொருளாக நினைப்பது?

(6)

284

        எழுமைக் கும்எனது ஆவிக்கு இன்அமு
            தத்தி னைஎனது ஆருயிர்
        கெழுமி யகதிர்ச் சோதி யைமணி
            வண்ண னைக்குடக் கூத்தனை
        விழுமி யஅம ரர்மு னிவர்வி
            ழுங்கும் கன்னற் கனியினைத்
        தொழுமின் தூயம னத்த ராய்;இறை
            யும்நில் லாதுய ரங்களே.

   
பொ-ரை : எனது உயிர்க்கு எக்காலத்திலும் இனிய அமுதம் போன்றவனை, எனது உயிரோடே வந்து கலந்து அதனாலே பேரொளியுருவனானவனை, நீலமணி போன்ற நிறத்தையுடையவனை, குடக்கூத்து ஆடியவனை, சிறந்த நித்தியசூரிகளாலும் முனிவர்களாலும் நுகரப்படுகின்ற கன்னல் கனியினைப் பரிசுத்தமான மனத்தோடு வணங்குங்கள்; துன்பங்கள் சிறிதும் நில்லா.

    வி-கு :
கன்னல் - ஒரு மரவிசேடம்; கரும்புமாம். ‘தூய மனத்தராய்த் தொழுமின்; துயரங்கள் இறையும் நில்லா,’ என மாறுக.
_____________________________________________________

1. ‘எத்தனை குளிக்கு நிற்கும்’ என்றது, ‘எத்தனை ஸ்நானத்திற்கு நிற்கும்,’
  என்றபடி.

2. பல நாள் என்ற பொருளில் ‘ஏழுநாள்’ என்று குறித்தல் மரபு. ‘ஒருநாள்
  எழுநாள்போற் செல்லும்’ என்ற திருக்குறளையும், ‘ஏழென்பது அதற்கு
  மேலாய மிக்க பன்மை குறித்து நின்றது: ‘ஒருவர் கூறை எழுவர் உடுத்து’
  என்றாற்போல,’ என்ற அதன் உரையையும் காண்க.