முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
216

அன

    அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே - இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்க, நஞ்சீயர், ‘இவர் புக்க இடம் எங்கும் 1இப்படியே சொல்லுவர்; இவர்க்கு இது பணியே அன்றோ?’ என்ன, ‘இவர் மற்றோரிடத்தில் தலை நீட்டுவது 2பாவ நத்வத்தைப் பற்ற; இவர் 3தஞ்சமாக நினைத்திருப்பது சக்கரவர்த்தி திருமகனையே,’ என்று அருளிச்செய்தார். 4‘‘ஸ்ரீராமா, நீதான் எல்லா உலகங்களிலுள்ள எல்லா உயிர்கட்கும் பாவத்தைப் போக்குகின்றவனாய் இருக்கிறாய்,’ என்கிறது இல்லையோ இவரையும்?’ என்ன, 5‘அவனும் இவரோடு ஒத்தான் ஒருவன்; இவர் ‘இனிய பொருள் வேறில்லை’ என்றிருக்குமாறு போன்று, அவன் ‘பாவநத்துக்கும் இவர் ஒழிய வேறில்லை’ என்றிருப்பான் ஒருவனாயிற்று.’ 6பட்டர் இராமாவதாரத்தில் பக்ஷபாதத்தாலே அருளிச்செய்யுமது கேட்கைக்காக, சிறியாத்தான், ‘பெருமாளுக்கு எல்லா ஏற்றங்களும் அருளிச்செய்ததேயாகிலும், பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டித் தூது போன கிருஷ்ணனுடைய நீர்மை இல்லையே சக்கரவர்த்தி திருமகனுக்கு? என்ன, ‘அதுவோ! பெருமாள் தூது போகாமை அன்றுகாண்; இக்ஷ்வாகு குலத்தாரைத் தூது போக விடுவார் இல்லாமைகாண்,’ என்று அருளிச் செய்தார்.

    ‘அவ்வவதாரத்தில் அக்குறை தீருகைக்காக அன்றோ கிருஷ்ணனாக அவதரித்துத் தூது போயிற்று? 7‘முன்னோர் தூது வான ரத்தின் வாயில் மொழிந்து அரக்கன், மன்னூர்

__________________________________________________

1. ‘இப்படியே சொல்லுவர்’ என்றது, ‘ஞானப்பிரானையல்லால் இல்லை நான்
  கண்ட நல்லதுவே,’ ‘வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி
  மற்றொன்று இலமே’ என்பன முதலாக வருகின்றவைகளைத் திருவுள்ளம்
  பற்றி.

2. பாவனத்வம் - பரிசுத்தமாம் தன்மை.

3. தஞ்சமாக - போக்கியமாக, ‘தஞ்சமாக’ என்பதற்கு, அவதாரிகையில்
  ரக்ஷகத்வபரமாக அருளிச்செய்தாலும், பட்டருக்குத் திருவுள்ளம்
  போக்கியதையிலே.

4. ஸ்ரீராமா. உத். 82 : 9. ‘இவரையும்’ என்றது, ஸ்ரீராமபிரானை.

5. ‘அவனும்’ என்றது, அகத்தியரை. ‘இவர்’ என்றது, ஆழ்வாரை.

6. பட்டருக்கு ஸ்ரீராமாவதாரத்தில் ஈடுபாடு மிக அதிகம். ‘மைவண்ண
  நறுங்குறுஞ்சி’ (திருநெடுந்தாண்) வியாக்கியானம் பார்க்க.

7. பெரிய திருமொழி, 2. 2 : 3.