முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
243

பட

பட்டது அன்றோ ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு? ‘நீர் இளவரசாக முடி சூடாவிடில் நாம் முடி சூடோம்,’ என்று பெருமாள் அருளிச் செய்யவும் 1முடி சூட இசையாத இளைய பெருமாளை அன்றோ, ‘இலக்ஷ்மணன் ஐஸ்வரியத்தால் நிறையப்பெற்றவன்,’ என்றது?

    மற்றும், ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போதோ!’ என்று கேட்க, 2‘இராஜ இலக்கணம் பொருந்திய தமையனாருடைய திருவடிகளைத் தலையிலே எதுவரையிலும் தாங்கமாட்டேனோ, அது வரையிலும் எனக்கு நிம்மதியானது உண்டாகமாட்டாது,’ என்கிறபடியே, பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று ஆறும்,’ என்றான் அன்றோ? 3‘அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு’ என்றார் ஸ்ரீ குலசேகரப் பெருமாள். ‘அடியிலே தலையாக வாழ அடியிடுகிறார்,’ என்றபடி. 4‘வைஸ்ரவணன்’ என்னுமாறு போன்று, பாரதந்திரியமாகிற செல்வத்தையுடையவர்களாதலின், ‘உடையார்’ என்கிறார். ‘இச்செல்வத்தை உடையர் ஆகிறார்கள்: மற்று என்ன ஏற்றம் உண்டாக வேண்டும் இவர்களை ஆதரிக்கைக்கு?’ என்னில், எவரேலும் - ஜன்ம ஒழுக்க ஞானங்கள் எவையேனும் ஆகவுமாம்; இது உண்டாமத்தனையே வேண்டுவது. அவர் கண்டீர் - ‘அடியார்’ என்றே தங்களை நிரூபிக்க வேண்டும்படியாய், வைணவனாம் தன்மைக்கு விரோதியான பிறப்பு முதலியவைகளால் வரும் அபிமானம் இல்லாதார் நமக்குத் தேட்டம்,’ என்கிறார்; ‘பிறப்பு ஒழுக்கம் ஞானம் இவைகளால் வரும் அபிமானம் பகவானுக்கு அடிமைப்படுதற்கு விரோதியாகையாலே அவை இல்லாதார் உத்தேசியர்,’ என்கிறார் என்றபடி.

    ‘அவர்கள் எத்தனை நாள்களுக்கு உத்தேசியர்?’ என்ன, பயிலும் பிறப்பிடை தோறு - மேன்மேல் என நெருங்கி வருகிற பிறவிகளில் அவகாசங்கள்தோறும். 5‘நின் பன் மா மாயப் பல்

_____________________________________________________

1. ஸ்ரீராமா. யுத்த. 131 : 88.

2. ஸ்ரீராமா, அயோத். 98 : 8.

3. பெருமாள் திருமொழி, 10 : 7. ‘அடியிலே தலையாக வாழ அடியிடுகிறார்’
  என்றது, சிலேடை: திருவடிகளிலே தலையை வைத்துக்கொண்டு வாழ’
  என்றும், ‘முன்னே சிறப்பாக வாழ’ என்றும் பொருள்படும்.

4. வைஸ்ரவணன் - விசிரவசுவினுடைய புத்திரன்; குபேரன்.

5. திருவாய். 3. 2 : 2.