முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
261

New Page 1

போன்ற நிறத்தையுடையவனை, எம்மானை, ஒளி பொருந்திய ஜோதி சொரூபத்தையுடையவனைத் தம் மனத்தின்கண் வைத்துத் தியானிப்பவர்கள்தாம், சலனமில்லாமல் எம்மை அடிமைகொண்டு இப்பிறவியோடு மற்றைப் பிறவிகளோடு வேற்றுமையின்றிக் காப்பவர் ஆவர்.

    வி-கு : கண்டீர் - தெளிவின்கண் வந்தது. சன்மாந்தரம் - வேறு பிறவி. அந்தரம் - வேறு. எம்மை தனித்தன்மைப்பன்மை.

    ஈடு : ஆறாம் பாட்டு. 1‘மேலே கூறிய சௌந்தர்யம் முதலியவற்றைத் திரள அனுபவிக்குமவர்கள் எனக்கு இரட்சகர்’ என்கிறார்.

    அளிக்கும் பரமனை - இவ்வாத்துமாக்களைக் காப்பாற்றுமிடத்தில் தனக்கு மேம்பட்டாரை இல்லாதவனை. அன்றிக்கே, ‘கொடுக்குமிடத்தில் தனக்கு மேல் இல்லாதவன்’ என்னுதல். அளித்தல் - காத்தலும், கொடுத்தலும். கண்ணனை - அளிப்பது தன்னையே அன்றோ? 2‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ என்றார் முன்னும். ஆழிப்பிரான்தன்னை - 3‘நாயுதாநி - ஆயுதங்கள் உனக்காக இல்லை’ என்கிறபடியே, தன்னோடு ஆயுதத்தோடு வாசி அற ‘பக்தாநாம் - பக்தர்களுக்காகவே’ என்று இருக்குமவனை. இதனால், ‘பரமனை’ என்ற பாசுரத்தை நினைக்கிறது. துளிக்கும் நறுங்கண்ணி - 4அவ்வளவில் அகப்படாதாரை அகப்படுத்துகைக்கு ஈடான கண்ணி இருக்கிறபடி. திருமேனியில் பரிசத்தாலே செவ்வி பெற்றுத் தேன் பெருக்கு எடுக்கின்ற நறு நாற்றத்தையுடைய திருத்துழாய்மாலையையும் உடையனாய்; ‘நாதனை’ என்ற பாசுரத்தில், நறுந்துழாய்ப் போதனை’ என்ற பகுதியை நினைக்கிறது. தூ மணி வண்ணன் எம்மான்தன்னை - பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கின்ற திருநிறத்தைக் காட்டி
_____________________________________________________

1. ‘மேலே கூறிய’ என்றது, இப்பாசுரத்திற்கு முன்னே போந்த ஐந்து
  பாசுரங்களிலும் கூறியவற்றை. முன் ஐந்து பாசுரங்களின் பொருள்கள்
  இப்பாசுரத்தில் குறிக்கப்படுதலை வியாக்கியானத்திற்காணலாகும்.

2. திருவாய். 2. 7 : 11.

3. ஜிதந்தா.

4. ‘ஒரு மிருகத்தை வளைத்தால் அது தப்பிப் போகுமேயாயின் அதனைக்
  கண்ணியிட்டுப் பிடித்தலைப் போன்று’ என்பது ரசோக்தி. கண்ணி -
  குளச்சிட்ட கயிறும், மாலையுமாம்.